Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இலவச திட்டங்கள் வெளியீட்டில் அரசு மவுனம்

இலவச திட்டங்கள் வெளியீட்டில் அரசு மவுனம்

இலவச திட்டங்கள் வெளியீட்டில் அரசு மவுனம்

இலவச திட்டங்கள் வெளியீட்டில் அரசு மவுனம்

ADDED : செப் 14, 2011 01:22 AM


Google News
சேலம்: ''தமிழக அரசின், இலவச கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் உள்ளிட்ட திட்டங்களை துவக்குவது தொடர்பாக, இதுவரை அரசிடம் இருந்து தகவல் வரவில்லை.

ரகசியம் காக்கப்படுகிறது,'' என, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார்.அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, இலவச கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், லேப்டாப், ஆடு, மாடு உள்ளிட்ட திட்டங்கள் துவக்க விழாவை, திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் திட்டங்கள் துவங்கப்படும். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், எவ்வளவு ஒதுக்கீடு, எந்த தொகுதியில் விழா, பொருட்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு, இதுவரை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.இலவச திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் அதிகாரிகளிடத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில், பொருட்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அரசின் இலவச திட்டங்களை அவர்கள் மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை.அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதியிலும், தலா மூன்று ஊராட்சிகள் வீதம், 2001 மக்கள் கணக்கெடுப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆயிரம் பயனாளிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட உள்ளது. கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் உள்ளிட்டவை, சென்னையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.சேலம் தாலுகாவில், 717 ஒதுக்கீடு செய்யப்பட்டு, உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆத்தூர், சங்ககிரி தாலுகா அலுவலகங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லேப் டாப்பை பொறுத்தமட்டில், மூன்று அரசுக்கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக, 168 பேருக்கு வழங்கப்பட உள்ளது. சேலம் அரசு மகளிர் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர் அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. இடைப்பாடி தாலுகா, ஆடையூர், கோவிந்தபாடி ஆகிய கிராமங்களில், மூன்று வெள்ளாடு, ஒரு ஆண் ஆடு என, நான்கு ஆடுகள், 129 பேருக்கு வழங்கப்பட உள்ளது.தாலிக்கு, 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில், மொத்தம், 500 பேருக்கு முதல் கட்டமாக வழங்கப்பட இருக்கிறது. அதற்கான பயனாளிகள் பட்டியலை சமூக நல அலுவலர் தயார் செய்துள்ளார். மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்தபின், பயனாளிகள் பட்டியல் தயாராகிவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கலெக்டர் மகரபூஷணம் கூறியதாவது:அரசிடம் இருந்து இதுவரை தகவல் வரவில்லை. அவர்கள் அறிவித்த பின்தான், எங்கு விழா நடத்த வேண்டும் என, தெரியவரும். கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் உள்ளிட்டவை லாரிகளில் வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு ஒதுக்கீடு என்பது தெரியாது, வரும் வரையில் வாங்குகிறோம். அரசு தரப்பில், ரகசியம் காக்கப்படுகிறது. அறிவிப்பு வந்தவுடன் உங்களுக்கு தகவல் அளிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.சேலம் மாவட்டத்தில், 16 அல்லது 17ம் தேதி இலவச திட்டங்கள் துவங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us