முழுமை பெறாத மாநராட்சியின் பட்ஜெட் திட்டங்கள்:சேலத்தில் தி.மு.க.,வினருக்கு பெரும் பின்னடைவு
முழுமை பெறாத மாநராட்சியின் பட்ஜெட் திட்டங்கள்:சேலத்தில் தி.மு.க.,வினருக்கு பெரும் பின்னடைவு
முழுமை பெறாத மாநராட்சியின் பட்ஜெட் திட்டங்கள்:சேலத்தில் தி.மு.க.,வினருக்கு பெரும் பின்னடைவு
ADDED : செப் 14, 2011 01:09 AM
சேலம் :சேலம் மாநகராட்சியில், ஐந்து ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட, மெகா பட்ஜெட் திட்டப் பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. முழுமை பெறாத திட்டங்களால், உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, சேலம் மாநகராட்சியை, தி.மு.க., கைப்பற்றியது. குடிநீர் பிரச்னை, சுகாதாரம் ஆகியவற்றுக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், தி.மு.க., சார்பில், பல்வேறு மெகா பட்ஜெட் திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், ஒரு திட்டப் பணி கூட முழுமை பெறவில்லை. பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.பிரத்யேக குடிநீர் திட்டம்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால், 283 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகளாக, தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு, சில மாதங்களுக்கு முன், பூமி பூஜை போடப்பட்டது. ஆரம்பத்தில், ராட்சத குழாய் பதிக்கும் பணி நடந்தது. தற்போது, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. திருமணிமுத்தாறு அபிவிருத்தித் திட்டம்: சேலம் மாநகராட்சியில், மூன்று ஆண்டுகளுக்கு முன், திருமணி முத்தாறு இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு இழுபறிக்குப் பின், 60 சதவீதம் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.திடக்கழிவு மேலாண்மை திட்டம்: இரண்டரை ஆண்டுகளுக்கு முன், குப்பையை தரம் பிரித்து உரமாக்கும் நோக்கத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. செட்டிச்சாவடி பகுதியில், 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆறு கோடியே 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பல ஆண்டு இழுபறிக்குப் பின், முழுமை பெறாமலேயே, தி.மு.க.,வினரால் விழா எடுக்கப்பட்டது.விமான போக்குவரத்து துறையிடம் தடையின்மை சான்றிதழ் பெறவில்லை, குப்பை சரிவர உரமாக்கப்படுவதில்லை ஆகிய சர்ச்சைகளால், திட்டத்தின் உண்மை நிலை தெரியவில்லை. தினமும், குறைவான குப்பையே செட்டிச்சாவடிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.பாதாள சாக்கடைத் திட்டம்: சேலம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு, 10 முறைக்கு மேல் டெண்டர் விட்டும், கட்டுமான நிறுவனங்கள் யாரும் முன்வரவில்லை. கடந்த ஆண்டு தான் இத்திட்டத்துக்கான அடிக்கல் நடப்பட்டது. ஒரு சில வார்டுகளில், ஜரூராக குழிகள் தோண்டப்பட்டன. பின், இத்திட்டப் பணிகள் குறித்து, யாரும் கண்டுகொள்ளவில்லை. பல வார்டுகளில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள் இதற்கு சாட்சி.தி.மு.க., ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட மெகாபட்ஜெட் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெகா பட்ஜெட் திட்டப் பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதால், பொதுமக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.