பிரதமரின் வங்கதேச பயணம்: பலத்த எதிர்பார்ப்பு : அடக்கி வாசிக்கப்படும் டீஸ்டா ஒப்பந்தம்
பிரதமரின் வங்கதேச பயணம்: பலத்த எதிர்பார்ப்பு : அடக்கி வாசிக்கப்படும் டீஸ்டா ஒப்பந்தம்
பிரதமரின் வங்கதேச பயணம்: பலத்த எதிர்பார்ப்பு : அடக்கி வாசிக்கப்படும் டீஸ்டா ஒப்பந்தம்
ADDED : செப் 06, 2011 11:18 PM

தாகா: பிரதமர் மன்மோகன்சிங், இரு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று வங்கதேசத் தலைநகர் தாகாவிற்குச் சென்றார். 12 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் வங்கதேசத்திற்குச் செல்வது இதுதான் முதன் முறை என்பதாலும், இருதரப்பிலும் முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாலும் பிரதமரின் வங்கதேசப் பயணம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த 1971ல் வங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்ற பின், 1972, மார்ச் 19ல் இந்தியாவும் வங்கதேசமும் 25 ஆண்டு நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டன. 1997ல் இந்த ஒப்பந்தம் காலாவதியான பின் இரு நாடுகளும் அதைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் இருதரப்பிலும் 40 ஆண்டுக்காலமாக கிடப்பில் கிடக்கும் எல்லை, துண்டு நிலம், ஆற்று நீர் பங்கீடு போன்ற பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில், கடந்தாண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார். அவரது அழைப்பை ஏற்று தற்போது பிரதமர் மன்மோகன்சிங் தாகாவுக்குச் சென்றுள்ளார். அவருடன் அசாம், திரிபுரா, மேகாலயா மற்றும் மிசோரம் மாநில முதல்வர்களும் சென்றுள்ளனர். வங்கதேசத் தலைநகர் தாகாவின் விமான நிலையத்தில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வரவேற்றார். இதையடுத்து, தாகாவில் இருந்து 35 கி.மீ.,தொலைவில் உள்ள சவார் என்ற இடத்தில், 1971ல் வங்கதேச விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார். பின் அங்கு மரக் கன்று ஒன்றை நட்டு நீர் ஊற்றினார்.
பிரதமரின் இந்தப் பயணத்தில், டீஸ்டா ஆற்று நீர் பங்கீட்டு ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.இவ்விவகாரத்தில் இருதரப்பும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பெனி ஆற்று நீர் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும் எனத் தெரிகிறது.
இந்த இரு ஒப்பந்தங்கள் தவிர, இந்தியாவுக்குச் சொந்தமான 111 துண்டு நிலப் பகுதிகள் வங்கதேசத்திலும், வங்கதேசத்திற்குச் சொந்தமான 51 துண்டு நிலப் பகுதிகள் இந்தியாவிலும் உள்ளன. இப்பகுதிகளில் வாழ்வோருக்கு இரு அரசுகளின் திட்டங்களும் சென்று சேர்வதில்லை. அதனால் இவ்விவகாரம் தற்போதைய பிரதமர் பயணத்தில் முக்கிய இடம் பெறுகிறது. அதேபோல், மேற்கு வங்கத்திற்கு அப்பால் உள்ள அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பு கொள்வதற்கு வங்கதேச போக்குவரத்துப் பாதைகளைப் பயன்படுத்தவும், நேபாளம், பூடானுடன் வங்கதேசம் வர்த்தகம் மேற்கொள்ள இந்திய நிலப்பகுதியைப் பயன்படுத்தவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். மேலும், வங்கதேசத்தில் உற்பத்தியாகும் 61 பொருட்கள் எவ்வித வரியுமின்றி இந்தியாவில் விற்க அனுமதிக்கப்படும். வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் மற்றும் மொங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.