மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது: சேலம் மத்திய சிறையில் அடைப்பு
மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது: சேலம் மத்திய சிறையில் அடைப்பு
மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது: சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சேலம்: கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியேறிய முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, சேலம் மாநகர போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
சேலம் அங்கம்மாள் காலனி நிலம், பிரீமியர் ரோலர் மில் அபகரிப்பு, தாசநாயக்கன்பட்டி பாலமோகன்ராஜ் நில ஆக்கிரமிப்பு ஆகிய வழக்குகளில் முதல் குற்றவாளியான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஜூலை 30ம் தேதி, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து, வீரபாண்டி ஆறுமுகத்துக்கு, ஆகஸ்ட் 30ம் தேதி, சென்னை ஐகோர்ட், ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், சேலம் கோர்ட்டில் காப்புத் தொகை செலுத்தி, ஜாமின் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விடுமுறை என்பதால், அவர் ஜாமினில் வெளிவருவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், சேலம் முதல் அக்ரஹாரத்தில் உள்ள கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள் பிரேம்நாத், ஸ்ரீநாத் சகோதரர்களுக்கு சொந்தமாக, சேலம் அங்கம்மாள் காலனி அருகில், 12 ஆயிரத்து 676 சதுர அடி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்ததோடு, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால், வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 16 பேர் மீது, மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மனோகரன், செப்டம்பர் 4ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். அன்றைய தினம் இரவே, இந்த வழக்கில் தொடர்புடைய எட்டு பேரை, சேலம் மாநகர போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் மாலை, சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கவுன்சிலர் ஜிம்மு ராமு ஆகியோரையும் கைது செய்து, நேற்று காலை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நேற்று முன்தினம் மதியம், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு, ஐகோர்ட் உத்தரவின் படி, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4, நீதிபதி ஸ்ரீவித்யா, ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, சிறை அதிகாரிகளை சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்வதற்காக, சேலம் மாநகர கூடுதல் துணை கமிஷனர் ராஜராஜன், தெற்கு சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்ட தனிப்படையினர், கோவையில் தொடர்ந்து முகாமிட்டு இருந்தனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவு, நேற்று காலை தான் சிறை அதிகாரிகளை சென்றடைந்தது. அதையடுத்து சிறை அதிகாரிகள், வீரபாண்டி ஆறுமுகத்தை வெளியில் அனுப்பினர். சிறையில் இருந்து வெளியே வந்த ஆறுமுகத்தை, கோவை மாநகர போலீசாரின் ஒத்துழைப்புடன், நேற்று மதியம், சேலம் போலீசார் மீண்டும் கைது செய்தனர். பின்னர் அவரை வேனில் ஏற்றி, நேற்றிரவு 8 மணிக்கு, சேலம் குற்றவியல் நடுவர் கோர்ட் எண் 4, நீதிபதி ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.