Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வன்னியர் பொதுநலச் சொத்து வாரியம் : பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

வன்னியர் பொதுநலச் சொத்து வாரியம் : பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

வன்னியர் பொதுநலச் சொத்து வாரியம் : பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

வன்னியர் பொதுநலச் சொத்து வாரியம் : பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

ADDED : செப் 04, 2011 01:22 AM


Google News
சென்னை: பா.ம.க.,விற்கு எதிராக உருவான வன்னியர் கூட்டமைப்பு, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில் வன்னியர்ளுக்கு, உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி, பல்வேறு போராட்டங்களை கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சி, வன்னியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இதனால், இட ஒதுக்கீடு கேட்டு ஐகோர்ட்டில், வன்னியர் கூட்டமைப்பு சார்பில், வழக்கு தொடுக்கப்பட்டு, அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்திற்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி சேலத்தில் வன்னியர் புரட்சி நாள் என்ற பொதுக்கூட்டத்தை நடத்த, வன்னியர் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, வன்னியர் கூட்டமைப்பு எழுதியக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த செல்வந்தர்கள், தங்களது சொத்துக்களை, வன்னியர் சமுதாய நலனுக்காக, தானமாக கொடுத்துள்ளனர். அவை எல்லாம் சமுதாய நலன் என்ற பெருநோக்கத்துடன் செய்யப்பட்டவை. ஆனால், அவற்றின் பலன் ஏதும் உரியவர்களுக்கு சென்றடையவில்லை. பலன்கள் பரிபூரணமாகவும் கிடைக்கவில்லை. இது குறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, 2001ல், தனி அலுவலர் ஒருவரை நியமித்து, வன்னியர் சொத்துக்களின் பலன் உரியவருக்கு கிடைக்க, வழிவகைகள் காண உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவினாலும், தனி அலுவலர் நியமித்ததாலும் பலன் ஏதும் ஏற்படவில்லை. மீண்டும் 2009ல், வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் அமைக்கப்பட்டதாக, ஆணை வெளியிடப்பட்டது. அதன் வாயிலாக, தனி அலுவலராக சந்தானம் நியமிக்கப்பட்டார். அவருடன் பணியாற்ற அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். அந்த அலுவலகம் மூலம், ஏறத்தாழ 67 வன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டசபையில், தி.மு.க., அரசு தெரிவித்தது. அதன்பின், 2010ல், 76 வன்னியர் அறக்கட்டளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக, வன்னியர் பொதுச் சொத்து வாரியம் அறிவித்தது.

வன்னியர் நலன் பாதுகாக்கப்படும் என்று சொல்லி வந்த, தி.மு.க., அரசு, அதற்கான சட்டம் எதுவும் இயற்றவில்லை. வக்பு வாரிய செயல்பாடுகளுக்கு, உரிய சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. அதனால் முஸ்லிம்கள் பயன் அடைவது போல, வன்னியர் சமுதாய மக்களும் வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் மூலம், உரிய பலன் பெற்று, வாழ்வதற்கு வழி வகை செய்யும் வகையில், சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அந்தக் கடி தத்தில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us