ADDED : செப் 03, 2011 12:45 AM
ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலம், அடுத்தடுத்த விடுமுறை நாட்களால், பொதுமக்கள் யாரும் வராததால், நேற்றைய தினம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், ஈரோடு தாலுகா அலுவலகம், மாவட்ட வட்டவழங்கல் அலுவலகம், சமூக நல பாதுகாப்புத்துறை, அரசு கருவூலத்துறை, பஞ்சாயத்து யூனியன் மற்றும் கிளைச்சிறைச்சாலை ஆகியவை அமைந்துள்ளன. மாவட்டம் முழுவதுமாக இருந்து, பட்டா மாறுதல், புதிய பட்டா கோருதல், ஜாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழாக, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும், புதிய ரேஷன் கார்டு, கார்டில் மாற்றங்களை செய்துகொள்ளவும், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் வருவது வழக்கம்.
ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், தாலுகா அலுவலகமே திருவிழா கோலமாக காணப்படும். புதன் கிழமை ரம்ஜான் பண்டிகை துவங்கி, விநாயகர் சதுர்த்தி மற்றும் நேற்று ஒரு நாள் இடைவெளியில், மீண்டும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்கள் வந்ததால், இங்கு பணியாற்றும் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் விடுப்பில் சென்றுவிட்டனர். அடுத்தடுத்த விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை என நினைத்து, பொதுமக்களும் வருவதை முற்றிலுமாக தவிர்த்தனர். இதனால், நேற்றைய தினம் வேலை நாட்களாக இருந்த போதிலும், எப்போதுமே 'பிஸி'யாக காணப்படும் தாலுகா அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.