Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்டத்தில் 133 பயனாளிகளுக்கு இலவச மாடு, ஆடுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 133 பயனாளிகளுக்கு இலவச மாடு, ஆடுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 133 பயனாளிகளுக்கு இலவச மாடு, ஆடுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 133 பயனாளிகளுக்கு இலவச மாடு, ஆடுகள்

ADDED : ஆக 29, 2011 11:21 PM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 133 பயனாளிகளுக்கு தமிழக அரசு இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்குகிறது.

இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார். கால்நடைத்துறையினர் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாடுகள் வாங்குவதற்கு ஆந்திராவிற்கு சென்றுள்ளனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாக கலெக்டரிடம் மனு அளித்தனர். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவி 5 பேருக்கு 28 ஆயிரம், முதியோர் உதவித் தொகை 7 பேருக்கு 84 ஆயிரம் ரூபாயினை கலெக்டர் ஆஷீஷ்குமார் வழங்கினார்.



பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டில் அரிசி வாங்கும் கார்டுகளுக்கு இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன் வழங்கப்படுகிறது. இம் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக எவ்வளவு பேருக்கு வழங்கப்பட உள்ளது என்கிற விபரம் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. இருப்பினும் தற்போது ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவோர் பட்டியல் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வரால் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பயனாளிகள் பட்டியல் கிராமசபையில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தமட்டில் கறவை பசுமாடுகள் ஓட்டப்பிடாரம் யூனியன் சங்கம்பட்டி கிராமத்தில் 47 பயனாளிகளும், விளாத்திகுளம் யூனியன் இனாம் சுப்பிரமணியபுரத்தில் 26 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசால் நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு மூலம் இந்த தேர்வு நடந்துள்ளது. இந்த பயனாளிகளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் இலவச மாடு வாங்கி கொடுப்பதற்கு ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு மாடு வாங்குவதற்கான பணிகளை கால்நடைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் செப்டம்பர் 15ம் தேதி ஆடு வழங்குவதற்கு திருச்செந்தூர் யூனியன் அம்மன்புரம், கோவில்பட்டி யூனியன் இடைச்செவல் ஆகிய இரண்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு தலா 30 பேர் வீதம் 60 பயனாளிகள் ஆடு பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய ஆடுகள் கால்நடைத்துறை மூலம் இந்த பகுதியிலே வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க பெண் பயனாளிகள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசின் வழிகாட்டுதல் முறைப்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்மணி, டி.ஆர்.ஓ., அமிர்தஜோதி, மக்கள் குறைதீர்க்கும் பிரிவு தனித்துணை ஆட்சியர் லதா, பி.ஆர்.ஓ சுரேஷ், கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் அசோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ளவர்கள் இலவச ஆடு, மாடு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயனாளிகள் 30 சதவீதம் பேர் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாடு வாங்கும் பயனாளிகளுக்கு ஒரு ஏக்கர் வரை நிலம் இருக்கலாம். ஆடு வாங்கும் பயனாளிகளுக்கு நிலம் இருக்க கூடாது. ஏற்கனவே மாடு உள்ளோருக்கு அரசின் இந்த திட்டம் மூலம் ஆடு கிடைக்கும். ஏற்கனவே ஆடு இருந்தால் அந்த பயனாளிகளுக்கு மாடு வழங்கப்படக் கூடாது என்று அரசு விதிமுறை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பயனாளிகள் தேர்வு நடந்திருப்பதாக கால்நடைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us