
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், 'தமாஷ்' பேட்டி : அன்னா ஹசாரே போராட்டத்தால், மக்கள் எழுச்சியெல்லாம் ஒன்றுமில்லை.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேட்டி: ஈழ தமிழர்களுக்கு, உரிய அரசியல் தீர்வை பெற்றுத் தர, சர்வதேச நாடுகளிடம் தன் செல்வாக்கை, இந்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். மத்திய அரசை நிர்பந்தித்து, அரசியல் ஆளுமையை முழுமையாக பயன்படுத்தி, இலங்கைத் தமிழர் துன்பத்தை, முதல்வர் ஜெயலலிதா துடைக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன், 'குபீர்' சிரிப்பு பேட்டி: ஆளுங்கட்சியாக இருந்தால் மட்டுமே, தி.மு.க., மக்கள் பணி செய்யும் என்பதல்ல; எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், எங்கள் பணி ஓய்ந்துவிடாது. இன்று, சட்டசபையில், தி.மு.க., எதிர்க்கட்சியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில், நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி. மக்கள் பணியில், தி.மு.க., எப்போதும் பின்னடைவை சந்தித்ததில்லை. அதனால், மிகப்பெரிய எழுச்சியுடன், கருணாநிதி தலைமையில் மீண்டும் தி.மு.க., ஆட்சியைப் பிடிக்கும்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா பேட்டி: அன்னா ஹசாரே போராட்டத்திற்கு, நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது. ஹசாரே குழுவுடன், மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வேண்டும்.
பா.ம.க., எம்.எல்.ஏ., குரு பேச்சு: தமிழகத்தில், 33 சதவீத பள்ளிகளுக்கு, பொதுக்கழிப்பிடமே இல்லை என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகளில், அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு, வழிவகை செய்ய வேண்டும். தற்போது, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு, 26.73 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதுமானதாக இல்லை.
தி.மு.க., முன்னாள் பேச்சாளர் வாகை முத்தழகன் பேட்டி: சாமானியர்களுக்காக, அண்ணாதுரையால் துவங்கப்பட்டு, எத்தனையோ பேர், கண்ணீரும், செந்நீரும் சிந்தி வளர்த்த தி.மு.க.,வை, நில ஆக்கிரமிப்பாளர்களின் காலடியில் வைத்துவிட்டார் ஸ்டாலின். நிலக் கொள்ளைக்காரர்களை, தினம் ஒரு ஜெயிலாக சென்று பார்ப்பது தான், இன்று அவருக்கு வேலையாக இருக்கிறது.
ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ பேச்சு : பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை, மத்திய அரசு ஒரு வேளை நிறைவேற்றினால், வரும் 2047ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது இந்தியாவில் தமிழகம் என்ற மாநிலம் இருக்காது. இந்திய தேசிய ஒருமைப்பாடும் தூக்கில் விடப்படும்.