ADDED : ஆக 23, 2011 11:46 PM
சென்னை:வரலாற்று சிறப்பு மிக்க மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவின்
சுற்றுப்புறம், குப்பை தேக்கம் மற்றும் மனித கழிவால் பொலிவிழந்து
காணப்படுகிறது.
மயிலாப்பூர், அபிராமபுரம், ஆர்.கே.நகர் வாசிகளின் ஓய்வு நேர இடமாகவும்,
இளைஞர்கள், முதியவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சி கூடமாகவும்,
சிறார்களின் விளையாட்டு திடலாகவும் நாகேஸ்வர ராவ் பூங்கா உள்ளது.சுந்தரம்
பைனான்ஸ் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள பூங்காவின் உட்புறம், சிறப்பான
பராமரிப்பில் உள்ளது. உட்புற பராமரிப்புக்காக, 12 பேர்
நியமிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் பூங்காவை தூய்மைப்படுத்தி சுத்தமாக
வைத்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, பூங்காவில் இசை
கச்சேரி நடக்கிறது.பூங்காவின் உட்புற பராமரிப்பை பாராட்டி, சென்னை நகரின்
சிறந்த பூங்கா என்ற விருதை, மயிலாப்பூர் அகடமி வழங்கியுள்ளது. ஆனால்,
பூங்காவின் வெளிப்பகுதிகள் போதிய பராமரிப்பு இல்லாமல், அசுத்தமாக
இருக்கிறது.லஸ் தேவாலயம் சாலை, லஸ் நிழற்சாலை, கிழக்கு அபிராமபுரம் சாலை
ஆகியவை, பூங்காவைச் சுற்றியுள்ளன.
பூங்காவின் பின்புறம் மற்றும்
பக்கவாட்டுப் பகுதிகளில், குடியிருப்புகள் உள்ளன. பகல், இரவு நேரங்களில்,
அப்பகுதியை கடப்பவர்கள், பூங்காவின் வெளிப்பகுதியில் அசுத்தம் செய்து
விடுகின்றனர்.குடியிருப்புப் பகுதிகளின் குப்பையை, பூங்காவின் பக்கவாட்டுச்
சாலைகளில் கொட்டிவிடுகின்றனர். இதனால், பூங்காவின் சுற்றுப்பகுதியில்
துர்நாற்றம் வீசுகிறது. பூங்காவின் சுற்றுப் பகுதியை சுத்தப்படுத்தும்
பொறுப்பு, நீல் மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் உள்ளது.இதுகுறித்து,
அப்பகுதி வாசிகள் கூறும்போது, 'பூங்காவைச் சுற்றி குப்பைகளை நாள்தோறும்
அகற்றுவதில்லை. மனித கழிவு துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவ
காரணமாக இருக்கிறது. பூங்காவின், உட்புறத்தை என்ன தான் சுத்தமாக
வைத்திருந்தாலும், வெளிப்புறப் பகுதி தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது
தான், பூங்காவின் தோற்றம் செம்மையாக இருக்கும்' என்கின்றனர்.பூங்காவை
கடந்து செல்பவர்கள், பூங்கா சுற்றுப் பகுதியில் அசுத்தம் செய்வதை நிறுத்த
வேண்டும். நம் பூங்கா என்ற உணர்வோடு, பூங்காவை பார்க்க வேண்டும் என்பதும்,
அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
பூங்காவின் சுற்றுப்பகுதி தூய்மை குறித்து, மாநகராட்சி அதிகாரி கூறும்போது,
'வெளிப்புறப் பகுதியில் குப்பை தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பூங்காவைச் சுற்றியுள்ளப் பகுதிகளில், சுகாதாரம் பேணும் வகையில்,
விழிப்புணர்வு பலகை மற்றும் வேண்டுகோள் வாசகங்கள் வைக்கப்படும்' என்றார்.