செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்த இப்பகுதி, பின் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
பிற்காலத்தில் இப்பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், பன்னெடுங்காலத்துக்கு முன்பே இது குடியிருப்பாக இருந்திருக்கிறது.
கி.பி., 1726, 1884, 1896, 1887ம் ஆண்டுகளைச் சேர்ந்த நான்கு கல்வெட்டுகளில் சைதாப்பேட்டையைப் பற்றிய குறிப்புள்ளது.
1884க்கு முன்னரே சைதாப்பேட்டை தாலுகாவாக இருந்துள்ளது. காரணி கிராமம் இதற்கு உட்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது. காருண்ணிய ஈஸ்வரன் கோவில் இருந்ததால், காருண்ணிய கிராமம் என அழைக்கப்பட்டிருக்கக் கூடும். காரணி என்றால் பார்வதி என்ற பொருளும் உண்டு. சைதாப்பேட்டையின் மற்றொரு பெயர் ரகுநாதபுரம்; இங்கு ராமர் கோவில் இருந்ததாகத் தெரியவருகிறது.
ஆற்காட்டு நவாப் 1730ல் தன் உதவியாளருக்கு நந்தனம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிகளைப் பரிசாகக் கொடுத்துள்ளார். நவாப் தனக்கு ஒரு பகுதியை வைத்துக் கொண்டு, நெசவாளர், வாணிகர், கலைஞர்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ள செய்தி தெரியவருகிறது. பரிசாகக் கொடுக்கப்பட்ட பின், இப்பகுதி சையத்கான் பேட்டை என அழைக்கப்பட்டிருக்கிறது. பின் சையத் பேட்டை எனவும், சைதாப்பேட்டை எனவும் மருவியிருக்கலாம்.