Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் தென்னிந்திய ஆடிட்டர்கள் மாநாடு

கோவையில் தென்னிந்திய ஆடிட்டர்கள் மாநாடு

கோவையில் தென்னிந்திய ஆடிட்டர்கள் மாநாடு

கோவையில் தென்னிந்திய ஆடிட்டர்கள் மாநாடு

ADDED : ஆக 19, 2011 01:32 AM


Google News
கோவை:தமிழக அரசியலில் முக்கிய மாறுதல் ஏற்பட காரணமான கோவை நகரம், இன்று முக்கிய நிகழ்வுகளின் தலைநகரமாக மாறி வருகிறது. தனது 43வது மாநாட்டை கோவையில் இன்றும் நாளையும் நடத்துவதின் மூலம், இந்த பட்டியலில் தென்னிந்திய ஆடிட்டர்கள் சங்கத்தின் பெயரும் இடம் பிடித்து கொண்டது. ஆடிட்டிங் தொடர்பான சமீபகால விவகாரங்கள் குறித்து ஆடிட்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக மாநாட்டின் நிகழ்வுகள் அமைந்துள்ளதால், 'ஞான சங்கமம்' என மாநாட்டுக்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்தியாவில் 1949ல் ஆடிட்டர்கள் சங்கம் துவங்கப்பட்டது. ஏப்.,1952ல் மும்பை, கோல்கத்தா, சென்னை, கான்பூர், டில்லி ஆகிய ஐந்து நகரங்களில் மண்டல சங்கத்தின் மண்டல கவுன்சில்கள் துவங்கப்பட்டன. தென்னிந்தியாவில் (சென்னை) ராஜம் ஐயர் என்பவரை தலைவராகக் கொண்டு முதல் கிளை துவங்கப்பட்டது. 1952ல் வெறும் 457 ஆக இருந்த தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை, 39 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது. சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பட்டய கணக்காளர் பயிற்சி மையத்தில் ஆறு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவராக கோவையை சேர்ந்த ராமசாமியும், தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவராக சண்முக சுந்தரமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஒரே மாவட்டத்தை (பெரு நகரங்கள் அல்லாத) சேர்ந்த இருவர் ஒரே நேரத்தில் சங்கத்தின் இந்திய, தென்னிந்திய தலைவர் பதவிகளை வகிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்புமிக்க தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம், இந்தாண்டு ஏப்ரல் முதல் 2012 மார்ச் மாதம் வரை தனது 60வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் 43வது மாநாடு கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா அரங்கில் இன்றும் நாளையும் பிரமாண்டமான முறையில் நடக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி துவக்கி வைக்கிறார். இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் ஜெய்தீப் நரேந்திர ஷா மற்றும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத் தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். செயலாளர் முரளி,கோவை கன்வீனர் கந்தசாமி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.மாநாடு குறித்து தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:மாநாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி,ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த சுமார் 3,000 ஆடிட்டர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். துவக்க நிகழ்ச்சிக்குப் பின் ஆடிட்டிங் தொழில் நுணுக்கங்கள் மற்றும் இத்துறை சார்ந்த சமீப கால முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு நிபுணர்கள் பேசுகின்றனர்.

மறைமுக மற்றும் நேர்முக வரி, சேவை மற்றும் கலால் வரி, பொருளாதார சீரமைப்பில் இந்தியாவின் அனுபவம், வருமான வரிச் சட்டம், டி.டி.எஸ்., தடயவியல் தணிக்கை முறை, புதிய சட்டங்களின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள், சர்வதேச வரிமுறை உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள விஷயங்கள் குறித்த நிபுணர்களின் பேச்சு, பங்கேற்கும் ஆடிட்டர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

முதல் நாள் மாலை 6.00 மணிக்கு 'திரைப்பாடல்கள்-நேற்று முதல் இன்று வரை' என்ற தலைப்பில் இசையமைப்பாளர் பரத்வாஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சி உண்டு. இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், மனதுக்கு அமைதி தரும் ஆன்மிக பாடல்கள் மற்றும் உரையுடன் துவங்குகிறது. மாலை 4.30 மணிக்கு இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் ஜெய்தீப் நரேந்திர ஷா ஆகியோரின் உரையுடன் இரண்டு நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.இவ்வாறு, சண்முகசுந்தரம் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us