ADDED : ஆக 14, 2011 03:03 AM
திருப்பூர் : திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் தூங்கிய தம்பதியின் ஆண் குழந்தையை
கடத்தி சென்றவனை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்;
அவனிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டது.மைசூர் ஓசூரை சேர்ந்தவர் பாலா; மனைவி
பார்வதி. இவர்களுக்கு மூன்று வயதில் பூஜா என்ற பெண் குழந்தையும், சூர்யா
என்ற ஒன்பது மாத ஆண்
குழந்தையும் உள்ளனர். பழைய துணிகளை வாங்கி வியாபாரம் செய்து வரும் பாலாவுக்கு வலிப்பு நோய் இருந்தது.
திருப்பூர் அலகுமலை அருகில் உள்ள வலுப்பூரம்மன் கோவிலில் சாமி தரிசனம்
செய்தால், வலிப்பு நோய் சரியாகிவிடும் என, நேற்று முன்தினம் வலுப்பூரம்மன்
கோவிலுக்கு வந்தனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு, திருப்பூர் பழைய பஸ்
ஸ்டாண்ட் வந்த போது நள்ளிரவு ஆனதால், பஸ் ஸ்டாண்டில் படுத்து தூங்கினர்.
நள்ளிரவு 12.30 மணியளவில், அங்கு வந்த ஒருவன், பாலா அருகில்
தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சூர்யாவை திருடி சென்றான். சிறிது நேரத்தில்
குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கூச்சலிட்டனர். தாராபுரம்
வழியாக பழனி செல்லும் பஸ்சில் வாலிபன் குழந்தையுடன் சென்றதும்,
அந்நேரத்தில் பஸ் ஸ்டாண்டிலிருந்து அந்த பஸ் மட்டுமே கிளம்பியதும்
தெரியவந்தது.போனில் தகவல் தெரிவிக்கப்பட்டு, தாராபுரம் பஸ்சில் இருந்த
வாலிபனையும், குழந்தையையும் மீட்ட மற்ற பயணிகள் திருப்பூர் அழைத்து வந்து
தெற்கு போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் குழந்தையை
கடத்தியவன் ஈரோடு, பவானியை சேர்ந்த பூபதி (35), என தெரிந்தது.அவனிடம்
போலீசார் விசாரிக்கின்றனர்.