ADDED : ஆக 03, 2011 10:17 PM
சென்னை: 'தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்ட தங்கபாலு எப்படி கட்சிக்காரர்களை நீக்க முடியும்?' என்ற கேள்வியை, காங்கிரஸ் சீரமைப்புக்குழு எழுப்பியுள்ளது. காங்கிரஸ் சீரமைப்புக்குழுவின் அமைப்பாளர் ஜி.ஏ.வடிவேலு வெளியிட்ட அறிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து விட்ட தங்கபாலு, காங்கிரஸ் சீரமைப்புக்குழு அமைப்பாளரான என்னையும், துணை அமைப்பாளர்களான இதயத்துல்லா மற்றும் கவிஞர் ஜோதிராமலிங்கம் ஆகியோரையும் கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக அறிவித்திருப்பது விந்தையிலும் விந்தை. தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்ட ஒருவர், கட்சிக்காரர்களை எப்படி நீக்க முடியும். பொதுக்குழு கூட்டம் கூட்டுவது என்பது தனிப்பட்ட ஒரு சிலரின் முடிவல்ல. தமிழக காங்கிரசில் உள்ள மாநில நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களின் ஒட்டு மொத்த முடிவு.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.