கோபியில் வேளாண் கிடங்கு அமைக்க முடிவு
கோபியில் வேளாண் கிடங்கு அமைக்க முடிவு
கோபியில் வேளாண் கிடங்கு அமைக்க முடிவு
ADDED : ஜூலை 27, 2011 01:15 AM
கோபிசெட்டிபாளையம்: கோபியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் கிடங்கு கட்டுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவர் கூறியதாவது: கோபியில் வேளாண் துறை சார்பாக விவசாயிகளுக்கு தரமான விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்க, போதுமான கிடங்கு வசதி கோபியில் இல்லை. இக்குறையைப் போக்க, 3,000 சதுர அடியில் கிடங்கு, வேளாண் அலுவலகம், விவசாயிகள் பயிற்சி அரங்கு ஆகியவை கொண்ட வளாகம், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மாவட்டத்தில் தென்னை மரங்களை அதிகம் தாக்கி, மகசூல் இழப்பை ஏற்படுத்தும் கருந்தலை புழுக்களை அழிக்க, கோபியில் ஒட்டுண்ணி உற்பத்தி மையம் செயல்படுகிறது. உயிரியல் முறையில் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில், புழுக்களை இவை கட்டுப்படுத்துவதால், மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மத்தியில், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து தேவை அதிகமாக உள்ளதால், ஒட்டுண்ணி மையத்தை கோபி பெரியளவில் அமைக்க, மொடச்சூர் வாரச்சந்தை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த மையத்தில், கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்தும் 'பிரக்கானிட்' என்ற குழவி வகை ஒட்டுண்ணி உற்பத்தி செய்யப்படும். விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். வேளாண் இணை இயக்குனர் மனோகரன், உதவி இயக்குனர் ஆசைத்தம்பி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.