Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/"யானை'யை பன்றியாக்கிய வேளாண் துறை அலுவலர் :பயிர் சேத மதிப்பீட்டில் குளறுபடி: விவசாயி கலக்கம்

"யானை'யை பன்றியாக்கிய வேளாண் துறை அலுவலர் :பயிர் சேத மதிப்பீட்டில் குளறுபடி: விவசாயி கலக்கம்

"யானை'யை பன்றியாக்கிய வேளாண் துறை அலுவலர் :பயிர் சேத மதிப்பீட்டில் குளறுபடி: விவசாயி கலக்கம்

"யானை'யை பன்றியாக்கிய வேளாண் துறை அலுவலர் :பயிர் சேத மதிப்பீட்டில் குளறுபடி: விவசாயி கலக்கம்

ADDED : ஜூலை 19, 2011 12:15 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி அருகே காட்டு யானைகள் கரும்பு பயிரை நாசம் செய்தது தொடர்பாக விவசாயிக்கு வேளாண் துறையினர் கொடுத்த சேத மதிப்பீடு அறிக்கையில், காட்டு பன்றிகள் பயிர்களை நாசம் செய்ததாக கொடுத்ததால், பாதிக்கப்பட்ட விவசாயி கலக்கம் அடைந்துள்ளார். தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்டது ஈச்சம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் கடந்த 2ம் தேதி பரிகம் பகுதியில் இருந்து வழி தவறிய இரு யானைகள் அதிகாலை நேரத்த்தில் கிராமத்துக்குள் புகுந்தன. இரு யானைகளும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வெங்கடேசன் மற்றும் அவரது தம்பி கந்தசாமி என்பவர்களுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் தஞ்சம் புகுந்தன.

பகல் நேரத்தில் யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முடியாததால், வனத்துறையினர் மாலை நேரத்தில் யானைகளை விரட்ட முடிவு செய்தனர். இதனால், இரு யானைகளும் கந்தசாமிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் காலையில் இருந்து இரவு வரையில் தஞ்சம் புகுந்தது. யானைகளை பகல் நேரத்தில் விரட்டினால், மிரண்டு ஊருக்குள் ஓடி விடும் என்பதோடு, அந்த பகுதியில் அடர்ந்த வனப்பகுதி இல்லை என்பதாலும், பொதுமக்கள் அதிக அளவில் வேடிக்கை பார்க்க கூடியதால், பகல் நேரத்தில் யானையை கரும்பு தோட்டத்தில் இருந்து விரட்ட வேண்டாம் என வனத்துறையினர் கந்தசாமி உள்ளிட்ட கிராம மக்களை கேட்டு கொண்டனர்.

கரும்பு பயிர் சேதம் குறித்து வேளாண் துறையில் சான்று பெற்று வழங்கினால், உரிய மதிப்பீடு தொகை வழங்குவதாக வனத்துறை அதிகாரிகள் கந்தசாமிக்கு உறுதியளித்தனர். இரு யானைகளும் 2ம் தேதி பகல் முழுவதும் கந்தசாமி தோட்டத்தில் உள்ள கரும்புகளை அழித்து நாசம் செய்தது. இரவு 7 மணிக்கு மேல் வனத்துறையினர் இரு யானைகளையும் பட்டாசு வைத்து விரட்டினர். அங்கிருந்து அந்த யானைகள் மீண்டும் பரிகம் காட்டுக்குள் தஞ்சம் புகுந்தன. கந்தசாமிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் யானைகளால் கரும்பு பயிர் நாசமானது குறித்து வேளாண் துறையில் அறிக்கை பெற கந்தசாமியும், அவரது அண்ணன் வெங்கடேசனும் மனு செய்தனர்.

நல்லம்பள்ளி வேளாண் அலுவலர் மணிராஜன், கடந்த 5ம் தேதி கொடுத்த சேத மதிப்பீடு அறிக்கையில் வெங்கடேசன் தோட்டத்தில் யானைகள் பயிர்களை நாசம் செய்ததாகவும், கந்தசாமி நிலத்தில் காட்டு பன்றிகள் நாசம் செய்ததாக சேத மதிப்பீடு தொகை 64,800 ரூபாய் மதிப்புக்கான அறிக்கை வழங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கந்தசாமி கேட்ட போது, 'யானை பயிர்களை சேதம் செய்ததாக கொடுக்க முடியாது' என வேளாண் அலுவலர் மறுத்து விட்டதாக கந்தசாமி குற்றம்சாட்டினார். மேலும் கந்தசாமி கடந்த இரு வாரமாக கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்.

இது குறித்து விவசாயி கந்தசாமி கூறுகையில்,''யானைகள் தேசப்படுத்தினால், கூடுதல் இழப்பீடு தொகை கொடுக்க வேண்டும் என்பதற்காக வேளாண் அலுவலர் காட்டு பன்றிகள் நாசம் செய்ததாக கொடுத்துள்ளார். இழப்பீடு தொகைக்கு ஏற்ப கமிஷனாக கேட்டார் அதை கொடுக்க மறுத்ததால், இது போன்று செய்துள்ளனர். என் தோட்டத்துக்கு அருகில் உள்ள என் அண்ணனுக்கு யானைகள் மூலம் கரும்பு பயிர் சேதம் என சான்று கொடுத்துள்ளனர்,'' என்றார்.இது குறித்து வேளாண் அலுவலர் மணிராஜனிடம் கேட்ட போது,''எங்கள் பகுதியில் காட்டு பன்றிகள் மூலம் அடிக்கடி பயிர் சேதம் ஏற்படும் அதற்காக தயார் செய்த பாரத்தில் பூர்த்தி செய்து கொடுத்தோம். ஆனால், காட்டு பன்றி என்ற வார்த்தையை அடித்து விட்டு (ஆனால், அவர் கொடுத்த அறிக்கையில் காட்டு பன்றி என உள்ளது) காட்டு யானைகள் என கொடுத்தேன்,'' என்றார். மாவட்ட நிர்வாகம் விசாரித்து பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us