/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/நில அபகரிப்பு: இரு கோஷ்டிகள் மோதல் : பதட்டத்தை தவிர்க்க போலீஸ் குவிப்புநில அபகரிப்பு: இரு கோஷ்டிகள் மோதல் : பதட்டத்தை தவிர்க்க போலீஸ் குவிப்பு
நில அபகரிப்பு: இரு கோஷ்டிகள் மோதல் : பதட்டத்தை தவிர்க்க போலீஸ் குவிப்பு
நில அபகரிப்பு: இரு கோஷ்டிகள் மோதல் : பதட்டத்தை தவிர்க்க போலீஸ் குவிப்பு
நில அபகரிப்பு: இரு கோஷ்டிகள் மோதல் : பதட்டத்தை தவிர்க்க போலீஸ் குவிப்பு
ADDED : ஆக 07, 2011 01:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அகச்சிப்பள்ளியில் நில அபகரிப்பில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்ட மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர்.
பதட்டத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அகச்சிப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட ஆவின் மேம்பாலம் அருகே 30,000 சதுர அடி காலி நிலம் உள்ளது. இந்த நிலம் வெங்கட்ராமன் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தை தான் வாங்கியுள்ளதாக அவதானப்பட்டியை சேர்ந்த வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் திருப்பதி கவுண்டர் அங்கு கொட்டகை போட்டு மாங்காய் மண்டிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள இந்த நிலத்தை வாங்க பல்வேறு முக்கிய புள்ளிகள் போட்டி போட்டனர். தற்போதைய சந்தை மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்நிலையில், வெங்கட்ராமனின் வாரிசுகளிடம் இருந்து தர்மபுரி மாவட்டம் நாட்டான்கொட்டாய் பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் நாட்டான் மாது கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இந்த நிலத்தை வாங்கிவிட்டதாக கூறி அவர் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடினார்.மாநில லாரி உரிமையாளர் சங்க துணை தலைவராக உள்ள நாட்டான் மாது தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நிலத்தை தனக்கு சொந்தமாக்க முயன்றார். ஆனால், உள்ளூரை சேர்ந்த திருப்பதி கவுண்டர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடி வந்தார். இதனிடைய இரு தரப்பினரும் நிலம் குறித்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தான் வாங்கிய நிலத்தை திருப்பதி கவுண்டர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து கொண்டதாக நாட்டான் மாது கிருஷ்ணகிரி மாவட்ட நில அபகரிப்பு தனிப்பிரிவில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் திருப்பதி கவுண்டரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்து கொண்ட வழக்கில் அவரை கைது செய்ததாக போலீஸார் கூறுகின்றனர். ஆனால் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மட்டுமே திருப்பதி கவுண்டரை போலீஸார் கைது செய்துள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.திருப்பதி கவுண்டர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த நாட்டான் மாது கோஷ்டியினர் நேற்று மினி லாரியில் 50க்கும் மேற்பட்டோர் பிரச்னைக்குரிய இடத்துக்கு வந்து அங்கு அமர்ந்திருந்த திருப்பதி கவுண்டரின் உறவினர்களை வெளியே போகுமாறு கூறியுள்ளனர். உடனடியாக இடத்தை காலி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதால் அங்கிருந்த திருப்பதியின் உறவினர்கள் வெளியேறி அவதானப்பட்டியில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். நாட்டான் மாது கோஷ்டியை சேர்ந்த இளைஞர்கள் பிரச்னைக்குரிய இடத்தில் அமர்ந்து அந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக கழிவு நீர் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டிடருந்தவர்ளை மிரட்டி விரட்டியுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீஸாரை கண்டதும் பிரச்னைக்குரிய இடத்தில் அமர்ந்திருந்த நாட்டான் மாதுவின் கோஷ்டியை சேர்ந்த இளைஞர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை போலீஸார் துரத்தி நான்கு பேரை மட்டும் பிடித்தனர். பிடிப்பட்ட இளைஞர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று போலீஸாரிடம் கூறிவில்லை. அவர்கள் தங்கள் மொபைல்ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டு போலீஸாரை மிரட்டி கொண்டிருந்தனர்.பிடிப்பட்ட நான்கு பேரையும் போலீஸார் விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். நிலம் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதுவரை நிலத்துக்கு யாரும் உரிமை கொண்டாட வேண்டாம் என போலீஸார் அறிவுறித்தி அவதானப்பட்டியை சேர்ந்தவர்களை அனுப்பி வைத்தனர். இருப்பினும் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.