அவமதிப்பு வழக்கு: சுகாதாரத்துறை செயலர் கோர்ட்டில் ஆஜர்
அவமதிப்பு வழக்கு: சுகாதாரத்துறை செயலர் கோர்ட்டில் ஆஜர்
அவமதிப்பு வழக்கு: சுகாதாரத்துறை செயலர் கோர்ட்டில் ஆஜர்

சென்னை : கோர்ட் அவமதிப்பு வழக்கில், சுகாதாரத் துறை செயலர் நேற்று ஐகோர்ட்டில் ஆஜரானார்.
தங்களுக்கும் சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு -1 'ஏ'க்கும் இடையே சம்பள வேறுபாடு உள்ளது; ஆனால், இருவரும் ஒரே பணியை தான் செய்கிறோம் என அரசிடம் சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 'பி' முறையிட்டனர். இதையடுத்து, கிரேடு-1 'ஏ'க்கு இணையாக கிரேடு-1 'பி' ஆய்வாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு அக்டோபர் முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவால், தங்களது சீனியாரிட்டி பாதிக்கப்படும் எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் சேலத்தைச் சேர்ந்த வெங்கடரமணன், இளங்கோ மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்', '1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களாக சேர்க்கப்பட்ட தொழுநோய் ஆய்வாளர்களை, சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 என கருத வேண்டும். அவர்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் டெக்னிக்கல் தனி உதவியாளர் என பதவி உயர்வு வழங்க வேண்டும். இவர்களின் ஜூனியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட தேதியில் இருந்து சம்பள பலன்களுடன் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' என உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அப்போதைய சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ், பொது சுகாதார இயக்குனர் பொற்கை பாண்டியனுக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
சுகாதாரத் துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார். ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த அரசுக்கு இரண்டு வார காலம் அவகாசத்தை, 'டிவிஷன் பெஞ்ச்' வழங்கியது. கோர்ட் உத்தரவை அமல்படுத்தி, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.