Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கலெக்டரிடம் விளக்கம் கேட்டவர்களுக்கு "சிறை'

கலெக்டரிடம் விளக்கம் கேட்டவர்களுக்கு "சிறை'

கலெக்டரிடம் விளக்கம் கேட்டவர்களுக்கு "சிறை'

கலெக்டரிடம் விளக்கம் கேட்டவர்களுக்கு "சிறை'

ADDED : ஜூலை 11, 2011 09:30 PM


Google News
திருப்பூர் : முதலிபாளையம் பள்ளி இட மாற்ற பிரச்னை குறித்து ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த இருவர், கலெக்டரிடம் விளக்கம் கேட்டனர். அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியதால் ஆவேசம் அடைந்த கலெக்டர், அவ்விருவரையும் கூட்ட அரங்கில் பாதுகாப்பாக அமர்ந்திருக்க உத்தரவிட்டார். கூட்டம் முடிவதற்கு சற்று நேரத்துக்கு முன், அவர்களை விடுவித்தார். பொதுமக்கள் குறைகேட்பு முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வாரம்தோறும் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் மனு கொடுக்க வருகின்றனர். இவர்களுக்காக, அரங்கின் ஒரு வாயிலில் சாய்தள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் முன்னிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் நேற்று திறந்து வைத்தார். கலெக்டரிடம் மனு கொடுக்க ஏராளமானோர் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களிடம் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ஐந்தாவது தூண் அமைப்பினர், பூஜ்ய ரூபாய் நோட்டு மற்றும் கல்விக்கட்டணம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை வினியோகித்தனர். முதலிபாளையம் பள்ளி இடமாற்றம் பிரச்னை குறித்து ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த கணேஷ் மற்றும் ராஜா முகமது ஆகியோர் கலெக்டரிடம் விளக்கம் கேட்டனர். பல நாட்களாக இப்பிரச்னை நடந்து வருகிறது. அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆவேசப்பட்ட கலெக்டர் மதிவாணன், 'இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 'இருவரும் இதுகுறித்து எந்த தகவலும் தெரியாமல், பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தீர்களா?' என்று கேட்டார். போலீசாரை அழைத்து இருவரையும் பாதுகாப்பாக அமர வைக்க உத்தரவிட்டார். அவர்கள் இருவரையும் போலீசார் அழைத்து சென்று அங்கிருந்த பெஞ்சில் நீண்ட நேரம் அமர வைத்தனர். கூட்டம் முடியும் முன், அவர்களை விடுவிக்க கலெக்டர் உத்தரவிட்டார். இரண்டு பேரின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்களை பெற்றுக்கொண்டு போலீசார் அனுப்பினர். இதனால், கூட்டரங்கில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. சாயப்பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, தொழில் பாதுகாப்பு குழுவினர் 1,701 பேர் மனு அளிக்க வந்ததால், மற்றவர்களிடம இருந்து மனுக்களைப்பெற நீண்ட நேரமானது. வழக்கமாக கலெக்டர் மட்டுமே நேரடியாக மக்களிடம் மனுக்களை பெறுவார். நேற்று ஏற்பட்ட தாமதம் காரணமாக, கலெக்டர், டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, துணை கலெக்டர் சரஸ்வதி, உதவி கலெக்டர் செல்வராஜ், ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் என ஐந்து பேர் மனுக்களை பெற்றனர். பேத்திகளுடன் தவிக்கும் பாட்டி: தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் (65). கணவரை இழந்த இவர், நான்கு பேத்திகளுடன் மனு அளித்தார். அங்கப்பன் என்ற மகன், புத்தி சுவாதீனம் இல்லாமல் எங்கேயோ போய்விட்டார். அவரது மனைவி வனிதா, 11 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவர்களுக்கு பிரியா (18) , ஜோதி (17), புவனேஸ்வரி (14) மற்றும் தேவி (12) என நான்கு பெண் குழந்தைகள். இவர்களை கண்ணம்மாள் வளர்த்து வருகிறார். எந்த வருமானமும் இல்லை. வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர். பேத்திகளை காப்பாற்ற வழியின்றி தவிப்பதாக தெரிவித்தார். பிரியா, ஜோதி இருவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் உரிய பயிற்சி அளித்து, இலவசமாக தையல் இயந்திரம் வழங்கவும், மற்ற இருவரையும் அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. இதுதவிர, கண்ணம்மாளுக்கு ஆதரவற்றோர் உதவித்தொகைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

பட்டா கேட்டு பெட்டியுடன் வந்தோர்: காங்கயம் ரோடு, சத்யா நகரை சேர்ந்த பொதுமக்கள் சிலர், தாங்கள் வசிக்கும் பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்ததாகவும், கலெக்டர் நேரடியாக அந்த இடத்தை ஆய்வு செய்து பட்டா அளிக்க முடியுமா, இல்லையா என உறுதியாக தெரிவிக்க வேண்டும் என்று மனு அளித்தனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த இடம் மற்றும் குடியிருப்பதற்கான ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்களை பழைய சூட்கேஸ் பெட்டியில் எடுத்து வந்து கலெக்டரிடம் காட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us