/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாங்கொல்லையை மறப்பார்களா அரசியல் கட்சிகள்?மாங்கொல்லையை மறப்பார்களா அரசியல் கட்சிகள்?
மாங்கொல்லையை மறப்பார்களா அரசியல் கட்சிகள்?
மாங்கொல்லையை மறப்பார்களா அரசியல் கட்சிகள்?
மாங்கொல்லையை மறப்பார்களா அரசியல் கட்சிகள்?
ADDED : செப் 29, 2011 12:51 AM
சென்னை : மயிலை மாங்கொல்லை பகுதியில் அரசியல் கட்சிகள் நடத்தும் தொடர் பொதுக்கூட்டங்களால், கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
அமைதியாக, உள்ளத்துக்கு நிறைவை ஏற்படுத்தும் வழிபாட்டை, பொதுக்கூட்ட இரைச்சல் குலைக்கிறது என்று பக்தர்கள் வருந்துகின்றனர்.மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில், பண்டிகைக் காலங்கள் மட்டுமில்லாமல், எல்லா நாளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ராமகிருஷ்ணா மடம் சாலை கோவிலுக்கு வரும் பிரதான சாலையாக உள்ளது. கோவிலை சுற்றியுள்ள குறுகிய மாட வீதிகள் வழியாக பக்தர்கள் நடந்தும், வாகனத்திலும் கோவிலுக்கு வருகின்றனர்.சென்னை நகரில் அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டத்தை நடத்த கோவிலுக்கு எதிரே உள்ள மாங்கொல்லை பகுதியையே, பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர். போலீசாரும் இந்த இடத்தை பொதுக்கூட்டம் நடத்தும் பகுதி என, நிரந்தரமாக முடிவு செய்துள்ளனர்.அரசியல்கட்சிகளுக்கு இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படும் நாள்களில், பகலிலேயே சாலைகளை மறித்து பொதுக்கூட்ட மேடை அமைக்கின்றனர். மேடைக்கு முன் அமருவதற்கு நாற்காலிகளை வேறு போட்டு விடுகின்றனர். கட்சி கொடி கம்பங்களும், டியூப் லைட்களும், தலைவர்களையும், கட்சி சின்னங்களையும் பிரதிபலிக்கும் அலங்கார வளைவுகளும், சீரியல் செட்டுகளுமாக, அரசியல் அரங்கமாக இந்த பகுதி மாறிவிடுகிறது.இதனால்,இந்த பாதையைக் கடக்கும் பக்தர்கள், கோவிலுக்கு வந்தோமா, இல்லையா என்பதை மற்றொரு முறை யோசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதோடு, பொதுக்கூட்டம் 8 மணிக்கு துவங்கும் என்றால், 5 மணிக்கே கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்ப தொடங்குகின்றனர்.மாலை நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளாலும், கட்சியின் கொள்கை விளக்க பாடல்களாலும் உள்ளம் நொந்து போகின்றனர். கோவிலுக்கு வாகனத்தில் வருபவர்கள் அவற்றை எங்கே நிறுத்துவது என தெரியாமல் அல்லாடுகின்றனர்.தற்போது, நவராத்திரி கொலு பண்டிகையால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மயிலை மாங்கொல்லையில். பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகள் தொடர்ந்து அனுமதி கேட்டுள்ளன. சில கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளன. இதனால், பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பக்தர்களின் உள்ளத்தையும், பிரசித்தி பெற்ற கோவிலின் பெருமையையும் காக்கும் வகையில், மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்ட திடலை, கோவில் நிகழ்ச்சிகளைத் தவிர, வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.


