உள்ளாட்சி பதவிகளில் "ஜாதிய' ஆதிக்கம்
உள்ளாட்சி பதவிகளில் "ஜாதிய' ஆதிக்கம்
உள்ளாட்சி பதவிகளில் "ஜாதிய' ஆதிக்கம்
தர்மபுரி: தமிழகத்தில், உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களே தேர்வு செய்யும் நிலையுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசியல் சின்னங்களில் போட்டியிட முடியாது. சுயேச்சை சின்னங்களில் மட்டுமே போட்டியிட முடியும். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை பொறுத்த வரை, கவுரவ பதவியாக இருந்தபோதும், அந்த பதவிக்கும் சமீப காலமாக போட்டி அதிகரித்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கும், அதில் மூன்றில் ஒரு பங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது பிரிவுகளை பொறுத்த வரையில் (ஆண், பெண்), அனைத்து சமூக மக்களும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பொது பிரிவுகளில் அனைத்து சமூக மக்கள் போட்டியிட வாய்ப்பு இருந்த போதும், அந்த பகுதியில், ஜாதிய ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு, பெரும்பான்மை மக்கள் தொகை உள்ள குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வரும் போக்குயிருந்து வருகிறது. இதனால், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலை பொறுத்த வரை, பெரும்பான்மை ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து, தேர்தலுக்கு முன் வேட்பாளர் தேர்வை நடத்தி, தங்கள் ஜாதி மக்கள் அனைவரும், தாங்கள் தேர்வு செய்த நபருக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என, ஊர் கூடி முடிவு செய்கின்றனர். பொது பிரிவுகளில் பெரும்பான்மை சமுதாயத்தினர் தேர்வு செய்த வேட்பாளரை எதிர்த்து, பிற சமூகத்தினர் தேர்தலில் போட்டியிட்ட போதும், பெரும்பான்மை ஜாதியை சேர்ந்தவர்களின் ஓட்டுக்கள், சிறுபான்மை ஜாதியை சேர்ந்த வேட்பாளருக்கு கிடைப்பதில்லை.
இதே போன்ற நிலை தான் கிராம ஊராட்சி அளவிலான பதவிகளில் தேர்வு முறையிருந்து வருகிறது. வரும் தேர்தலில் கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகள் மொத்தம், 12 ஆயிரத்து, 524 பதவிகளில், பொது பிரிவுக்கு, 8,235 இடங்களும், கிராம வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் மொத்தம், 99 ஆயிரத்து, 333 இடங்களில், 66 ஆயிரத்து, 212 இடங்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.