Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கொஞ்சம் தண்ணீர்... நிறையா கழிவு!

கொஞ்சம் தண்ணீர்... நிறையா கழிவு!

கொஞ்சம் தண்ணீர்... நிறையா கழிவு!

கொஞ்சம் தண்ணீர்... நிறையா கழிவு!

ADDED : செப் 22, 2011 01:53 AM


Google News
சேலம்:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட, 36வது டிவிஷன் மக்களுக்கு, 8 நாட்களுக்கு ஒருமுறை கொஞ்சம் தண்ணீர் வருவதாகவும், வீதிகளில் கழிவுநீர் அதிகம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட, 36வது வார்டு டவுனில் இருந்து ஒன்றரை கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. ஆதிசெல்வம் கணபதி தெரு, கிருஷ்ணா நகர், நஞ்சம்பட்டி, கந்தம்பட்டி, வெங்கடாஜலம் தெரு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தெருக்கள், 36வது டிவிஷனில் உள்ளடங்கியுள்ளது. மொத்தம், 12 ஆயிரத்து, 500 வாக்காளர்களும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 36வது டிவிஷன் கவுன்சிலராக காங்., கட்சியை சேர்ந்த தர்மலிங்கம் இருந்து வருகிறார்.இங்கு குடிநீர், போர்வெல், குப்பை, சாக்கடை கழிவு, கொசு மருந்து உள்ளிட்ட பிரச்னைகள் அதிகம் உள்ளதாக, பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற பொதுமக்கள் எதிர்பார்ப்புக்கு, இதுவரை விடை கிடைக்கவில்லை.ஆதிசெல்வம் கணபதி தெருவை சேர்ந்த கமலா கூறும் போது, ''சாக்கடை கழிவுகள் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. வீட்டுக்கு முன், சாக்கடை கழிவுகள் எப்பொழுதும் தேங்கி கிடக்கிறது.

சாக்கடை கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் கிருமிகளால், தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி அவதிப்படுகிறோம். புதிய சாக்கடை கட்டி கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. சாக்கடை சுத்தம் செய்ய, 10 நாட்களுக்கு ஒருமுறை கூட ஆள் வருவதில்லை. நாங்களே சாக்கடை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது,'' என்றார்.அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, ''சாலைகளில் குப்பை தொட்டி அமைக்காததால், சாலை ஓரங்களில், மக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். வீதிகளில் குப்பைகள் பறந்து, சுற்றுப்புற சுகாதாரத்தை சீரழித்து வருகிறது. சாலை ஓரங்களை சிறுவர்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி, அசுத்தம் ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பொது கழிப்பிடம் கட்டி கொடுக்க வேண்டும்,'' என்றார்.நஞ்சம்பட்டியை சேர்ந்த முருகன் கூறும் போது, ''நஞ்சம்பட்டி பகுதியில் சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மழை காலங்களில் சாக்கடை தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சாக்கடையில் இருந்து புழுக்கள் வெளியேறும் மோசமான நிலையே உள்ளது. போர்வெல் குழாய் பழுதடைந்து பத்து ஆண்டுகளாகியும், அதை சீர் செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. நஞ்சம்பட்டியை கடந்து செல்லும், மிலிட்டரி ரோட்டில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை இல்லை. இங்குள்ள சிறுவர், சிறுமியர் அடிக்கடி விபத்தில் சிக்கி, பலத்த காயம் அடைந்து வருகின்றனர். வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்கின்றனர். சிறிது நேரம் மட்டுமே குடிநீர் விடுவதால், மக்களுக்கு போதுமானதாக இல்லை. குடிநீர் விநியோகம் கொஞ்சமாகவும், சாக்கடை கழிவு வீதிகள் முழுவதும் நிறைந்திருக்கும் நிலையிலே வார்டு உள்ளது,'' என்றார்.வெங்கடாசலம் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி கூறும் போது, ''இந்த தெருவில் பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பை அள்ளுகின்றனர். கொசு மருந்து எந்த காலத்திலும் அடிப்பதில்லை. இதனால், நோய் அவஸ்தையில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்,'' என்றார்.

அதே பகுதியை சேர்ந்த ஷர்மிலி கூறியதாவது:குடிநீர் தண்ணீர் பிரச்னையும், சாக்கடை, குப்பை பிரச்னையும் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. சுகாதாரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம்.

இந்த பகுதியில் ஒரு தெருவிளக்கு கடந்த ஒரு வாரமாக எரியவில்லை. தெரு விளக்கு பழுதடைந்தால், சீர் செய்ய, 15 நாட்களுக்கு மேல் காலதாமதம் செய்து விடுகின்றனர், என்றார்.சாக்கடை கழிவு, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முன் வரும் வேட்பாளர்களுக்குத்தான், இந்த டிவிஷன் மக்கள் வாய்ப்பு கொடுக்கும் நிலை இப்போதைக்கு உள்ளது.இலவச அரிசியால் புழுக்கள்; கவுன்சிலர் 'காட்டம்'சேலம் மாநகராட்சி, 36வது டிவிஷன் கவுன்சிலர் தர்மலிங்கம் கூறியதாவது:இந்த டிவிஷனில் சுகாதார பணிக்கு, 23 பேரை மட்டுமே ஒதுக்கி கொடுத்துள்ளனர். ஐந்து பேர் டிராக்டரில் குப்பை அள்ளும் பணிக்கு சென்று விடுகின்றனர். சாக்கடை கழிவு சுத்தம் செய்யும் பணிக்கு ஆட்களை, வீதிகளுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. நஞ்சம்பட்டியில், இலவச அரிசி சமைத்து சாப்பிட்டு விட்டு, மீதியை சாக்கடையில் கொட்டி விடுகின்றனர். இலவச அரிசி சாதத்தில் இருந்து வெளி வரும் புழுக்கள்தான் சாக்கடையில் மிதக்கின்றன. பட்டநாயக்கர் தெருவில் புதியதாக சாக்கடை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 95 சதவீதம் சாலை பணிகள் முடித்துள்ளேன். 45 இடங்களில், 'சின்டெக்ஸ் டேங்க்' வைத்து, தேவையான தண்ணீர் வசதியை செய்து கொடுத்துள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us