Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் திடீர் மறியல்: அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் திடீர் மறியல்: அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் திடீர் மறியல்: அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் திடீர் மறியல்: அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

ADDED : செப் 22, 2011 12:24 AM


Google News

சென்னை : ரேடியாலஜிஸ்ட் பணித் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், 50க்கும் மேற்பட்டோர், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக அலுவலகம் அருகே, நேற்று சாலை மறியல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பரிசோதனை மையங்களின், ரேடியாலஜிஸ்ட் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, எழும்பூர் மருத்துவப் பணிகள் கழக அலுவலகத்தில், நேற்று நடந்தது. இப்பணியில் சேருவதற்கு, ஓராண்டு ரேடியாலஜி சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். நேர்முகத் தேர்வில் பங்கேற்க, 88 பேர் வந்திருந்தனர். இவர்களில், 28 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.



மற்றவர்கள், மருத்துவ கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் படித்ததாக கூறி, அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேர்முகத் தேர்வுக்கு வந்த, 50 பேர், அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேர்முகத் தேர்வுக்கு வந்த ஒருவர் கூறியபோது, ''நேர்முக தேர்வில் பங்கேற்குமாறு கடிதம் வந்ததால் தான் நாங்கள் பணம் செலவழித்து சென்னைக்கு வந்தோம். இப்போது அனுமதியில்லை என சொல்வது சரியல்ல. எங்களையும் அனுமதிக்க வேண்டும்,'' என்றார். போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை அரசுக்கு அனுப்புவதாக, மருத்துவப் பணிகள் கழக அதிகாரிகள் உறுதியளித்ததால், மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.



'வேலை வாய்ப்பு அலுவலக பட்டியலை பின்பற்றினோம்' மருத்துவப் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்புமாறு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாங்கள் கேட்டிருந்தோம். அவர்கள் அனுப்பிய பட்டியல் அடிப்படையில், நேர்முகத் தேர்வுக்கு அழைத்தோம். ஆனால், பலர் அங்கீகாரம் பெறாத பயிற்சி நிறுவனங்களில் படித்திருப்பது தெரிந்தது. விதிப்படி, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் நியமிக்க முடியும். எனவே, அங்கீகாரம் பெறாத நிறுவனங்களில் படித்தவர்களை நேர்முகத் தேர்வில் அனுமதிக்கவில்லை. அவர்களை அனுமதிக்க அரசு உத்தரவிட்டால் எங்களுக்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு அதிகாரி கூறினார்.



தவறு யாருடையது? : தங்களது தேவை என்ன என்பதை, வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, மருத்துவப் பணிகள் அலுவலகம் அனுப்பியதா என்பது குறித்துத் தெளிவான விவரம் கிடைக்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால், வேலை வாய்ப்பு அலுவலகத்தினர், அதற்கேற்றபடி பட்டியல் அனுப்பி இருப்பர். மேலும், வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து வரும் பட்டியலை, அப்படியே தேர்வுக்கான விண்ணப்பங்களாகக் கருதி, தேர்வெழுத அழைப்பதால், இது போன்ற சிக்கல்கள் உருவாகின்றன. இது போன்ற தவறுகளை, அரசு அலுவலகங்கள் தவிர்க்க வேண்டும் என, வேலை வாய்ப்பில் சான்றிதழ்களைப் பதிந்துள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us