ADDED : ஆக 29, 2011 10:51 PM
சென்னை : முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கு, சென்னை ஐகோர்ட் இடைக் கால முன் ஜாமின் வழங்கியது. வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரங்காரெட்டி என்பவர், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கு எதிராக, போலீசில் புகார் அளித்தார். நில அபகரிப்பு தொடர்பான இந்தப் புகாரில், தனக்கு முன் ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் பரிதி இளம்வழுதி மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி சி.டி.செல்வம் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பரிதிக்கு இடைக் கால முன் ஜாமின் வழங்கி, நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' நியமிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை வாபஸ் பெறுவதாக, அவரது தரப்பு வழக்கறிஞர் தலைமை நீதிபதிக்கு தெரிவித்தார். இதையடுத்து, வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமின் மனு, நீதிபதி சுதந்திரம் முன் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே, ஜாமின் மனுவை சேலம் செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.