ADDED : ஜூலை 29, 2011 11:02 PM
ராஜபாளையம் : ராஜபாளையம் பெண்கள் கல்லூரி அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்தவர்களை ராஜபாளையம் வடக்கு போலீசார் தேடுகின்றனர்.
தென்றல்நகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி புஷ்பம்(55). காலையில் மெயின்ரோட்டில் நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று காலை 7 மணிக்கு அந்த ரோட்டில் உள்ள பெண்கள் கல்லூரி அருகே நடந்துசென்று கொண்டு இருந்தார். அந்த வழியாக ஆட்டோவில் சென்ற மர்ம நபர்கள் இருவர், புஷ்பம் அருகே ஆட்டோவை நிறுத்தினர். சேலையால் புஷ்பத்தின் முகத்தை மூடிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 5பவுன் தங்கசங்கிலியை அறுத்தனர். இதில் சங்கிலியின் சிறுபகுதி மட்டும் புஷ்பத்தின் கையில் சிக்கியது. பின், ஆட்டோவில் சென்று மர்மநபர்கள் தலைமறைவாகினர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., காசியப்பன் மற்றும் போலீசார், தலைமறைவானவர்களை தேடுகின்றனர்.