கொலை முயற்சி வழக்கில் இளைய சன்னிதானம் சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்
கொலை முயற்சி வழக்கில் இளைய சன்னிதானம் சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்
கொலை முயற்சி வழக்கில் இளைய சன்னிதானம் சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்
சென்னை : திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த சன்னிதானத்தை, விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயற்சித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், இளைய சன்னிதானம் உள்ளிட்ட, 10 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
கூலிப்படையினரை இளைய சன்னிதானத்தின் அறைக்கு, சுவாமிநாதன் அழைத்துச் சென்றார். மூத்த சன்னிதானத்தின் அறைக்குள் நுழைந்து, அவரைக் கொலை செய்வதற்காக விஷ ஊசி, தலையணையுடன் தயாராக இருந்தனர். அறைக்குள் இருந்த கதவின் பின்புறம், இவர்கள் மறைந்திருந்தனர். அப்போது, வரதராஜன் என்பவர், இதைக் கவனித்து விட்டார். உடனே, கூலிப்படையினர் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்தச் சம்பவம், 2002ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி நடந்தது. சம்பவம் தொடர்பாக, இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சந்நிதி உள்ளிட்ட, 11 பேர் மீது குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை, மயிலாடுதுறை முதன்மை உதவி செஷன்ஸ் கோர்ட் விசாரித்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும், தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது. 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தண்டனையை, நாகப்பட்டினம் முதன்மை செஷன்ஸ் கோர்ட் உறுதி செய்து, 2005ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
சிறைத் தண்டனையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் இளைய சன்னிதானம் உள்ளிட்ட, 11 பேரும் அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, சங்கரன் என்பவர் இறந்து விட்டார். அதனால், அவரது வழக்கு கைவிடப்பட்டது. அப்பீல் மனுக்களை, நீதிபதி வாசுகி விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அசோக்குமார், சண்முகசுந்தரம், வழக்கறிஞர்கள் ஜான் சத்யன், அப்துல்ஹாதி ஆஜராகினர். மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட, 10 பேரையும் விடுதலை செய்து, நீதிபதி வாசுகி உத்தரவிட்டார்.
அரசுத் தரப்பு வழக்கில், முரண்பாடுகள் உள்ளன; வழக்கை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லை; அடையாள அணிவகுப்பில் முறைகேடு நடந்துள்ளது என, தனது உத்தரவில் நீதிபதி வாசுகி கூறியுள்ளார். சிறைத் தண்டனை விதித்து, செஷன்ஸ் கோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அபராதத் தொகையை மனுதாரர்கள் செலுத்தியிருந்தால், அதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என, நீதிபதி வாசுகி உத்தரவிட்டுள்ளார்.