எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்தது காங்கிரஸ் தான் : ராம் ஜெத்மலானி திடீர் பல்டி
எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்தது காங்கிரஸ் தான் : ராம் ஜெத்மலானி திடீர் பல்டி
எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்தது காங்கிரஸ் தான் : ராம் ஜெத்மலானி திடீர் பல்டி
ADDED : செப் 19, 2011 11:54 PM

புதுடில்லி: ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில், அமர்சிங் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி,'பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்பதற்கு, காங்கிரஸ் கட்சி தான், எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்தது' என வாதாடினார். கடந்த 2008ல், ஐ.மு., கூட்டணி அரசுக்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்பதற்காக, எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த இரண்டு முன்னாள் எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, டில்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அமர்சிங்கிற்கு, ஏற்கனவே 19ம் தேதி (நேற்று) வரை இடைக்கால ஜாமின் அளிக்கப்பட்டு இருந்தது. இதை நீட்டிக்க கோரி, அமர்சிங் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான முந்தைய விசாரணை கோர்ட்டில் நடந்த போது, அமர்சிங் சார்பில் கோர்ட்டில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறுகையில், 'நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக பயன்படுத்தப்பட்ட பணம், பா.ஜ., கட்சியினரால் கொடுக்கப்பட்டது' என குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், இந்த மனு நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமர்சிங் சார்பில் ஆஜரான ராம்ஜெத்மலானி,'நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக எம்.பி.,க்களுக்கு பண பட்டுவாடா நடந்தது. இது, அமர்சிங் வீட்டில் நடந்ததாக கூறப்படுவது தவறு. டில்லியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் தான், இதற்கான பண பட்டுவாடா நடந்தது. இந்த பணத்தை, அமர்சிங் கொடுக்கவில்லை; காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., அகமது படேல் தான் கொடுத்துள்ளார்' என்றார்.
ராம்ஜெத்மலானியின் இந்த திடீர் பல்டி, டில்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று, பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி, நேற்றும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இது தொடர்பாக, சிறப்பு கோர்ட் நீதிபதி சங்கீதா திங்ரா செகல் கேள்வி எழுப்பியதை அடுத்து, குல்கர்னி சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,'என் கட்சிக்காரர் இன்னும் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை. எனவே, அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்றார். இதையடுத்து, அமர்சிங்கிற்கான ஜாமினை 27ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மயக்கம்: ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொகைல் ஹிந்துஸ்தானி, விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென மயக்கம் அடைந்து, கீழே விழுந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


