Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மினி தீத்தடுப்பு வாகனம் விரைவில் அறிமுகம்

மினி தீத்தடுப்பு வாகனம் விரைவில் அறிமுகம்

மினி தீத்தடுப்பு வாகனம் விரைவில் அறிமுகம்

மினி தீத்தடுப்பு வாகனம் விரைவில் அறிமுகம்

ADDED : செப் 16, 2011 02:50 AM


Google News
கோவை:குறுகலான வீதிகளுக்குள் நுழைந்து தீயை அணைக்கும், 'ஒரு டன்' எடை கொண்ட மினி தீயணைப்பு வாகனங்கள், விரைவில் தமிழக தீயணைப்புத்துறைக்கு வழங்கப்படுகிறது. தமிழகத் தீத்தடுப்பு மற்றும் மீட்புத்துறையில் தீயை அணைக்க நவீன கருவிகள் பல உள்ளன. மிக உயரமான கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்க ஸ்நார்கல் என்ற கருவியும் உள்ளது.தவிர கட்டட இடிபாடுகளுக்கும் சிக்கித் தவிப்பவர்களை வெளியில் கொண்டு வர , இடையில் உள்ள வலுவான மரங்கள், இரும்பு கம்பிகளை வெட்டி எடுக்கும் கருவிகள், ஹைட்ராலிக் மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக தீயணைப்பு நிலையங்களுக்குத் தேவையான வாகனங்கள் பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ் தயாரிப்பு மையங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே 92 வாகனங்கள் தயாரிக்கப்பட்டு, அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.ஆனாலும், டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகர தீயணைப்பு நிலையங்களில் மிகக்குறுகலான வீதிகளில் நுழைந்து உயரமான கட்டடங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க உதவும், ஒரு டன் எடை கொண்ட மினி தீயணைப்பு வாகனங்கள் உள்ளன.

இந்த நவீன ரக வாகனங்கள் தமிழ்நாடு தீயணைப்புத்துறையில் இல்லை.இச்சூழலில், நாட்டில் உள்ள தீத்தடுப்பு மற்றும் மீட்புத்துறையின் தரத்தை மேம்படுத்தவும், உலகத்தரத்துடன் கூடிய நவீன வாகனங்கள், உபகரணங்கள் வழங்கிட, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் தீயணைப்புத்துறையின் உதவி இயக்குனர் சந்தோஷ் ஜே தாமஸ் கோவை தீயணைப்பு நிலையங்களை ஆய்வு செய்தார்.இவரை, கோவை கோட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்புப்பணிகள் அதிகாரி சுப்பிரமணியம் வரவேற்று, கோவை தெற்கு, வடக்கு, கணபதி, பீளமேடு மற்றும் பொள்ளாச்சியில் உள்ள தீயணைப்பு வாகனம் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.அப்போது, மிகக்குறுகலான வீதிகளுக்குள் நுழைந்து தீயை அணைக்கும் ஒரு டன் எடையுள்ள மினி தீயணைப்பு வாகனங்களை கோவைக்கு மட்டுல்லாது, தமிழக தீயணைப்புத்துறைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தவிர, பேரிடர் மேலாண்மை திட்டத்தில் கூடுதலாக 60 தீயணைப்பு வாகனங்கள், நவீன கருவிகள் பெற்றுத்தர மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்தார். தமிழக தீத்தடுப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் உள்ள ஆள் பற்றாக்குறையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சந்தோஷ் ஜே தாமஸ் கூறினார்.

-எம்.கனகராஜ்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us