Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஊரும் பேரும்...

ஊரும் பேரும்...

ஊரும் பேரும்...

ஊரும் பேரும்...

ADDED : ஆக 17, 2011 06:39 PM


Google News
ஊர்ப்பெயர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் விஷயங்களை அறிந்து கொள்வது அலாதியான விஷயம். கி.பி., 1639ம் ஆண்டுக்குப் பின், 1639க்கு முன் என, இரு பிரிவுகளாகச் சென்னையின் வரலாறு குறிப்பிடப்படுகிறது. பெருநகராக வளர்ந்து, சுற்றியுள்ள இடங்களை தன்னுள் ஆகர்ஷித்துக் கொண்ட சென்னையின் துவக்க காலகட்டங்களில் இருந்த குடியிருப்புகளும், கிராமங்களும் மிகச்சிலவே.

புராதனச் சிறப்பு மிக்க குடியிருப்புகளுடன், புதிய குடியிருப்புகளும் சேர்ந்த கலவையான பரிமாணமே இப்போதைய சென்னை. சென்னையின் முக்கியக் குடியிருப்புகளின் பெயர்களும், அவற்றுக்கான காரணமும் சுவையான தகவல்களைத் தருகின்றன. சில பகுதிகளின் பெயர்களுக்கு காரணம் இருக்கிறது; சிலவற்றுக்கு யூகம் மட்டுமே அடிப்படை. சிலவோ காரணம் அறியமுடியாத புதிராக உள்ளன.

பரிச்சயமான சில ஊர்ப்பெயர்களின் வரலாற்று மூலம் இங்கே ஊரும் பேரும் பகுதியாக விரிகிறது...

அடையாறு

தென்சென்னையில், திருவான்மியூருக்கு முன்னதாக அமைந்துள்ள இப்பகுதியில், 2000ம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களது சவக்குழிகள் இப்பகுதியில் இருந்ததாக, 'தொல்பொருளாய்வும், தமிழர் பண்பாடும்' நூலாசிரியர் சா.குருமூர்த்தி சுட்டுகிறார்.

ஆற்றங்கரை நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தமிழர்கள் இப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. அடையாறில் கிடைத்துள்ள கல்வெட்டு ஒன்றில் பொன்னியம்மன் கோவில் பற்றிய குறிப்பு இருக்கிறது. இன்றும் உள்ள இப்பொன்னியம்மன் கோவில் அமைந்திருந்த பகுதி அப்போது, 'ஊறூர்' என, அழைக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய பெசன்ட் நகரும், ஊறூரின் ஒருபகுதிதான். ஊற்றூர் என்பதே ஊறூராக மருவியிருக்கலாம்.

'செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து புறப்படும் ஆறு, சென்னை வழியே சென்று கடலில் கலக்கிறது. அந்த ஆற்றின் பெயரே அடையாறு என நிலைத்திருக்கிறது', 'ஆறு கடலில் கலக்குமிடம் என்பதால் அடையாறு எனும் பெயர் அமைந்தது', 'அடை-சேறு நிறைந்த ஆறு என்பதால் இப்பெயர்' எனப் பல்வேறு பெயர்க்காரணங்கள் சொல்லப்படுகின்றன.

செம்பரம்பாக்கத்தில் இருந்தே அடையாறு என, ஆற்றின் பெயர் சொல்லப்படுவதில்லை. கோட்டூர் பகுதியில்தான் அடையாறு எனப் பெயர் பெறுகிறது. ராமாபுரம் பகுதியில் கல்லாறு என அழைக்கப்படுகிறது. எனவே, ஆறு கடலை அடையும் இடமே அடையாறு ஆகியிருக்க வேண்டும். இப்பெயரே, ஊர்ப்பெயராகவும், ஆற்றின் பெயராகவும் நிலைத்து விட்டது.

அடையார் எனக் குறிப்பிடுவது தவறு; அடையாறு என்பதே சரி என்ற கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us