பிரிட்டன்வாசிகளின் கணக்கு விவரங்கள்: பீதியை கிளப்பிவிட்டன பிரிட்டிஷ் பத்திரிகைகள்
பிரிட்டன்வாசிகளின் கணக்கு விவரங்கள்: பீதியை கிளப்பிவிட்டன பிரிட்டிஷ் பத்திரிகைகள்
பிரிட்டன்வாசிகளின் கணக்கு விவரங்கள்: பீதியை கிளப்பிவிட்டன பிரிட்டிஷ் பத்திரிகைகள்
லண்டன்: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டு விவரங்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள், இந்தியாவில் உள்ள 'கால்சென்டர்'கள் வழியாக, பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள 'கால்சென்டர்'கள் மூலம் தங்கள் பணிகளை நிறைவேற்றி வருகின்றன.
'தி சன்' பத்திரிகையின் புலனாய்வு: இவ்வாறு அளிக்கப்படும் முக்கியத் தகவல்கள், பாதுகாப்பாக இருகின்றனவா என்பது குறித்து, பிரிட்டனில் சந்தேகம் நீடித்து வந்தது. இதுகுறித்து, பிரிட்டனில் இருந்து வெளிவரும் 'தி சன்' என்ற ஆங்கிலப் பத்திரிகை புலனாய்வு மேற்கொண்டது. மும்பை மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் உள்ள 'கால்சென்டர்'களில், 'சன்' பத்திரிகையின் ரகசிய குழுவினர் இதுகுறித்து புலனாய்வில் ஈடுபட்டனர். இதற்காக தங்களை நேபாளத்தைச் சேர்ந்த ஒரு காப்பீட்டு நிறுவன அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டனர்.
சிக்கினார் தரகர்: 'கால்சென்டர்' களில் உள்ள விவரங்களைத் திருடி கறுப்புச் சந்தையில் விற்கும் தரகர்களை, சில இணையதளங்கள் மூலம் தேடினர். அப்போது, முன்னாள் 'கால்சென்டர்' ஊழியரான தீபக் சுபால் என்பவர் அவர்களிடம் சிக்கினார். அவரிடம் சில ரகசிய விவரங்களை விலைக்குக் கேட்டனர். பிரிட்டனில் இயங்கும், 'பார்க்ளேஸ் அண்டு லாயிட்ஸ் டி.எஸ்.பி.,' வங்கியின் 21 வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை, தீபக் அவர்களிடம் 250 பவுண்டுகள் (1 பவுண்டு - ரூ.70)வாங்கிக் கொண்டு ஒரு 'சாம்பிளுக்காக' அளித்தார்.
வீடியோவில் பதிவு: தொடர்ந்து, ஒரு காபி கடையில் அவர்களைச் சந்தித்த தீபக், மேலும் பல வாடிக்கையாளர்களின் விவரங்களை தனது மடிக் கணினியில் அவர்களுக்குக் காட்டினார். இந்த சம்பவங்கள் அனைத்தையும், 'சன்' குழுவினர் ரகசிய வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. பிரிட்டனைச் சேர்ந்த சில வாடிக்கையாளர்கள் தன்னிடமிருந்து வாரத்திற்கு ஒரு லட்சம் பேரைப் பற்றிய தகவல்களை வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார்.
வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவை விற்பனை: 'வங்கிக் கணக்குகள், பெயர், விலாசம், வங்கி பெயர் உள்ளிட்ட விவரங்கள் 25 பென்சுக்கு விற்கிறோம். இது, இங்கு ஒரு பெரிய தொழிலாகவே நடந்து வருகிறது. என்னைப் போன்று, 'கால்சென்டர்'களில் பணியாற்றும் 25க்கும் மேற்பட்டோர், இத்தகைய தகவல்களைத் திருடி விற்பனை செய்கின்றனர். மாதந்தோறும் நான், 5,000 பிரிட்டன் நாட்டவரின் கிரெடிட் கார்டு விவரங்கள், 25 ஆயிரம் வங்கிக் கணக்கு விவரங்கள், 50 ஆயிரம் பேரின் தனிப்பட்ட விவரங்களை விற்று வருகிறேன்' என்றும் தீபக் தெரிவித்தார். இந்த தொழிலின் மூலம், 'கால்சென்டர்'களில் பணியாற்றும் இயக்குனர்கள் அல்லது 'டீம் லீடர்கள்' மாதத்திற்கு 400 பவுண்டுகள் வரை சம்பாதிக்கின்றனர்.
தொடரும் தொழில்: இந்த தகவல்களை, பிரிட்டனைச் சேர்ந்த சமூக விரோதிகள் வாங்கி, வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு, நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இந்த தகவல்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ள 'தி சன்' பத்திரிகை, அதே தீபக் சுபால், தாங்கள் தொடர்பு கொண்ட அதே இணையதளம் மூலம் தற்போதும் அதே தொழிலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இத்தகவல்கள், பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.