ADDED : ஜூலை 25, 2011 09:37 PM
சூலூர் : கிழக்கு அரசூர் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
செங்கப்பள்ளி முதல் வாளையார் வரை அவிநாசி ரோட்டை, ஆறுவழிப்பாதையாக விரிவாக்கும் பணி நடக்கிறது. கருமத்தம்பட்டி, கணியூர், தென்னம்பாளையம், அரசூர் பிரிவு உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதில், தென்னம்பாளையத்தில் அன்னூர் ரோடு - அவிநாசி ரோடு சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இதனால், அன்னூர், வாகராயம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் தென்னம்பாளையம் - குரும்பபாளையம் ரோட்டில் திருப்பி விடப்பட்டன. கடந்த ஆறு மாதமாக லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் கிழக்கு அரசூர் ரோட்டில் சென்று, அன்னூர் ரோட்டை அடைந்து, சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வந்தன. தற்போது, இந்த ரோடு முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த ரோட்டில் செல்லும் பஸ், லாரி மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.