ADDED : செப் 17, 2011 05:42 AM
கொடைக்கானல் : கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
நகராட்சியினர் மெத்தனமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப, இங்கு தினமும், நான்கு லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. நீர் ஆதாரமான ரிசர்வாயர் அணை பராமரிக்கப்படாததால், கோடையில் வறண்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது ஏரி அருகே நீர்சதம்பல் பகுதியில் ஆழ்துளை அமைத்து, லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 'கவனிப்பு' க்கு மயங்கி, ஓட்டல், காட்டேஜ்களுக்கு, டிரைவர்கள் தாராளம் காட்டுவதால், மக்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில்லை. ஆனந்தகிரியில் ஏழு தெருக்கள், அண்ணாநகர், டர்னர்புரம் பகுதிகளில் 10 நாளுக்கு ஒரு முறை குடிநீர் கிடைப்பதே அரிது. எதிர்பார்த்த மழை இல்லாததால், குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுக்கலாம். இங்கு வசிப்போருக்கே குடிநீர் கிடைக்காத நிலையில், சுற்றுலா பயணிகள் இங்கு வருவதை தவிர்ப்பது நலம்.