ADDED : ஆக 09, 2011 02:10 AM
நாகர்கோவில் : இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் மண்டல அளவிலான ஷட்டில் விளையாட்டு நாகர்கோவிலில் நேற்று துவங்கியது.
இதில் மூன்று மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் கபடி, டேபிள்டென்னிஸ், கைப்பந்து, கூடைப்பந்து, ஷட்டில், ஹாக்கி, கையுந்துபந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையே நடத்துகிறது. 14, 17, 19 ஆகிய வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக மாணவர் மற்றும் மாணவியருக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளிலான போட்டிகள் கடந்த 1ம் தேதி துவங்கியுள்ளது. இப்போட்டி வரும் 10ம் தேதி நிறைவடைகிறது. மண்டல அளவிலான ஷட்டில் போட்டி நேற்று நாகர்கோவில் ஆபீசர்ஸ் கிளப்பில் துவங்கியது. துவக்க நிகழ்ச்சியில் ஆபீசர்ஸ் கிளப் செயலாளர் கணசேன், குமரி மாவட்ட மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ஜெயராஜ், திருநெல்வேலி மாவட்ட மண்டல உடற்கல்வி ஆய்வாளர் விஜயகுமாரி, ஸ்காட் உடற்கல்வி இயக்குனர் வின்ஸ்டன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் மூன்று மாவட்டங்களிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடம் வரும் மாணவ மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு கரூரில் நடக்கும் மாநில போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர். மாநில போட்டியில் இருந்து தேசிய போட்டிக்கான விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


