"மாஜி' மந்திரியின் ஜாமீன் மனு தள்ளுபடி : நில அபகரிப்பு வழக்கில் நீதிபதி அதிரடி
"மாஜி' மந்திரியின் ஜாமீன் மனு தள்ளுபடி : நில அபகரிப்பு வழக்கில் நீதிபதி அதிரடி
"மாஜி' மந்திரியின் ஜாமீன் மனு தள்ளுபடி : நில அபகரிப்பு வழக்கில் நீதிபதி அதிரடி
ADDED : செப் 30, 2011 10:51 PM
திருச்சி: ஈரோடு அ.தி.மு.க., பிரமுகர் கொடுத்த நில அபகரிப்பு வழக்கில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஈரோட்டைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் கருணாநிதி என்பவருக்குச் சொந்தமான நிலம் திருச்சி கொட்டப்பட்டில் இருந்தது. அந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், துணைமேயர் அன்பழகன், காங்கிரஸ் பிரமுகர் கொட்டப்பட்டு சண்முகம் உள்ளிட்ட எட்டு பேர் சேர்ந்து, மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாக, கடந்த இரு வாரங்களுக்கு முன், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, காங்கிரஸ் பிரமுகர் சண்முகம் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே, நில அபகரிப்பு வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் இந்த வழக்கிலும் கைதாகினர். கடந்த ஒரு வாரத்துக்கு முன், வழக்கில் சிக்கியுள்ள அனைவருக்கும் திருச்சி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை முடிந்து, கடந்த 27ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் பிரமுகர் சண்முகம் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி கோகுல்தாஸ், முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் ஆகியோர் மீதான ஜாமீன் மனு தீர்ப்பை மட்டும், 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பின், 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி கோகுல்தாஸ் உத்தரவிட்டார்.