Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/உள்ளாட்சி தேர்தலில் விதி மீறும் வேட்பாளர்கள்

உள்ளாட்சி தேர்தலில் விதி மீறும் வேட்பாளர்கள்

உள்ளாட்சி தேர்தலில் விதி மீறும் வேட்பாளர்கள்

உள்ளாட்சி தேர்தலில் விதி மீறும் வேட்பாளர்கள்

ADDED : அக் 06, 2011 03:17 AM


Google News
தர்மபுரி: சட்டசபை தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிப்பதில், போதிய பணியாளர்கள் இல்லாமல் தேர்தல் பிரிவு அலுவலர்கள் திணறி வரும் நிலையில், விதிமுறைகளை மீறி தேர்தல் விளம்பரங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களாக வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள செல்வாக்கு உள்ளவர்கள், முக்கிய புள்ளிகள், ஊர் தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து தேர்தல் ஆதரவு கேட்டு தீவிர களப்பணியில் ஈடுபட்டனர்.

கிராம பகுதியில் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு தேர்தல் போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், தேர்தல் சின்னங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

கிராம பகுதியில் சுவர் விளம்பரங்கள் செய்ய தடையின்மையை பயன்படுத்தி வேட்பாளர்கள் சுவர் விளம்பரங்களில் சட்டசபை தேர்தலை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் ஃபிளக்ஸ் போர்டு விளம்பரங்கள், பேனர்களின் ஆதிகம் அதிகம் உள்ளது.

நகரப்பகுதியில் ஆட்டோக்கள் மக்கள் கூடும் முக்கிய வீதிகளில் ஃபிளக்ஸ் போர்டு விளம்பரங்கள் மக்களை கவர்ந்து வருகிறது. சட்டசபை தேர்தலின் போது தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு காரணமாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு விளம்பரங்கள் கண்காணிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் பதவிக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு, போட்டியிடுவோரின் எண்ணிக்கையும் அதிகம் இருப்பதால், கிராம பகுதிகளில் தேர்தல் பிரிவு அலுவலர்களால் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர் விளம்பரங்கள், பிட் நோட்டீஸ் என கணக்கில்லாமல் அடித்து விநியோகம் செய்து வருகின்றனர். கிராம பகுதிகளில் உள்ள வீடுகளில் காலை எழுந்தவுடன் வேட்பாளர்களின் பிட் நோட்டீஸ்கள் தான் வீட்டில் உள்ளவர்களை வரவேற்கும் வகையில் பிட் நோட்டீஸ்கள் வீடுகளில் வீசி விட்டு செல்கின்றனர்.

கிராம பஞ்சாயத்துக்களில் தேர்தல் பரபரப்பு அதிகரித்து இருப்பதால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதியில் போலீஸார் பிரச்சாரம் முதல் பல்வேறு தேர்தல் பணிகள் குறித்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

நேற்று விஜயதசமி என்பதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பலரும் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் இருக்க வாய்ப்பு இருக்கும் என்பதால், நேற்று மாவட்டத்தில் பல வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினர்.

வீதி, வீதியாக சென்று வீடுகளில் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பு பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தர்மபுரி நகரப்பகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சுமதி, தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக வார்டு வாரியாக தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று தீவிர ஓட்டு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us