உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆடு, மாடு திட்டம் சூடு பிடிக்கும்
உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆடு, மாடு திட்டம் சூடு பிடிக்கும்
உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆடு, மாடு திட்டம் சூடு பிடிக்கும்
இலவச ஆடு, மாடு திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில், அமைச்சர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. இந்தாண்டு (2011-12) ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மூன்று மருக்கை, ஒரு கெடாவும், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒரு ஜெர்சி கலப்பின பசுவும் வழங்கப்பட உள்ளன. கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் மூலம், ஆடு மற்றும் பசு பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா சட்டசபை கூட்டத்தொடருக்கு முன், இத்திட்டம் செப்., 15ம் தேதி துவக்கப்படும் என அறிவித்தாரர். ஒவ்வொரு மாவட்டத்திலும், பால் உற்பத்தி குறைவான மற்றும் அரசு பால் கூட்டுறவு சங்கம் இல்லாத இரு கிராமங்களை அதிகாரிகள் தேர்ந்தெடுத்து, அக்கிராமங்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில், இலவசத் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அதில், ஆடு மற்றும் மாடு பெறும் பயனாளிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடுகள், பசுவுடன் விழாவில் பங்கேற்று, கால்நடைகளை பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வர் இத்திட்டத்தை துவக்கி வைப்பதற்காக, சில கிராமங்களில் மட்டும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். வரும், அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், பயனாளிகளுக்கு ஆடு, மாடு வழங்குவது, தேர்தல் நன்னடத்தை விதியின் கீழ் சற்று தொய்வு ஏற்படும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், விறுவிறுப்பாக பயனாளிகளுக்கு ஆடு, மாடு வழங்கப்படும். இத்திட்டத்தில் இடைத்தரகர்கள் இன்றி, பயனாளிகளே உள்ளூர் சந்தைகளில் ஆடுகளையும், வெளிமாநில சந்தையில் கலப்பின ஜெர்சியையும் வாங்குவதால், முறைகேடு மற்றும் அதிகாரிகளுக்கு கமிஷன் தொகை கொடுப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- என்.செந்தில் -