தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மணி மீது மேலும் ஒரு வழக்கு: ஊராட்சி தலைவரும் சிக்குகிறார்
தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மணி மீது மேலும் ஒரு வழக்கு: ஊராட்சி தலைவரும் சிக்குகிறார்
தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மணி மீது மேலும் ஒரு வழக்கு: ஊராட்சி தலைவரும் சிக்குகிறார்
ADDED : செப் 11, 2011 01:00 AM
திருப்பூர் :பொங்கலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மணி மீது, ரூ 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, மேலும் ஒரு வழக்கு பதிவானது. இவ்வழக்கில் நாச்சிபாளையம் தி.மு.க., ஊராட்சித் தலைவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் - தாராபுரம் ரோடு, என்.பி.லே-அவுட்டை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 50; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர், கடந்த 2006 நவ., 15ம் தேதி, அவிநாசிபாளையம் கவுண்டன் புதூரில், 10.5 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனைகள் பிரித்து விற்பனை செய்வதற்காக விலைக்கு வாங்கினார்.பத்து பேருக்கு சொந்தமாக இருந்த நிலத்தில், மற்றவர்களிடமிருந்து கிரையம் பெற்ற நிலையில், பழனிசாமி, வேலுசாமி, விஸ்வநாதன் ஆகியோரிடம் 2.56 ஏக்கர் நிலத்துக்கு கிரைய ஒப்பந்தம் செய்தார். இரண்டு தவணைகளாக 1.5 லட்சம், ஒரு லட்சம் என 2.5 லட்சம் ரூபாய் அவர்களுக்கு கொடுத்தார்.ஆறு மாதத்துக்குள் கிரையம் செய்து தர வேண்டிய நிலையில், நிலத்தின் உரிமையாளர்கள் மூன்று பேரும், பாலசுப்ரமணியத்திற்கு கிரையம் செய்து தர மறுத்தனர். அப்போதைய, பொங்கலூர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வான மணி, பணத்தையும், நிலத்தையும் தர முடியாது என்றும், கிரைய ஒப்பந்தத்தை திரும்ப கொடுத்து விடும்படியும், பாலசுப்ரமணியத்தை மிரட்டினார். கிரைய ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என, கோவை சிவில் கோர்ட்டில், பாலசுப்ரமணியம் வழக்கு தொடர்ந்தார்.கோர்ட்டில் தீர்ப்பு பாலசுப்ரமணியத்துக்கு சாதகமாக கிடைத்ததையடுத்து, பாக்கி தொகையாக 3.13 லட்சம் ரூபாயை செலுத்தி, கோர்ட் மூலம் அந்நிலத்துக்கு கிரையம் பெற்றார். தனக்கு சொந்தமான நிலத்துக்குள் யாரும் நுழையக் கூடாது என கோர்ட்டில், பாலசுப்ரமணியம், தடை உத்தரவும் பெற்றார்.கோர்ட் உத்தரவுகளை கண்டு கொள்ளாத மணி, பாலசுப்ரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அடியாட்களுடன் வந்து நிலத்தை அபகரித்துள்ளார். கோர்ட் மூலம் ஏற்கனவே கிரையம் பெற்ற அதே நிலத்தை, தனது பெயருக்கு கிரையம் செய்ததாக போலி ஆவணம் தயாரித்து, அதை நாச்சிபாளையம் தி.மு.க., ஊராட்சி தலைவர் சிவசேனாதிபதிக்கு விற்றதாகவும், மோசடியாக ஆவணம் தயாரித்துள்ளனர். எட்டு ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கர் நிலத்தை மனைகளாக பிரித்து, டி.டி.பி., மற்றும் ஊராட்சி அங்கீகாரம் பெற்று 60 பேருக்கு வீட்டு மனைகளாக விற்றுள்ளார். மணி, 2.56 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்டதுடன், மற்றவர்களிடம் விலைக்கு பெற்று, வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்பட்ட வீட்டு மனைகளில் உரிமையாளர்கள் 60 பேரையும் அனுமதிக்க மறுத்து மிரட்டியுள்ளார்.இதுகுறித்து பாலசுப்ரமணியம், திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தார். எஸ்.பி., உத்தரவின்படி, அவிநாசிபாளையம் போலீசார், பொங்கலூர் முன்னாள் எம்.எல்.ஏ., மணி, பழனிசாமி, வேலுசாமி, விஸ்வநாதன், நாச்சிபாளையம் ஊராட்சி தலைவர் சிவசேனாதிபதி ஆகிய ஐந்து பேர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.மேலும் ஒரு வழக்கு: திருப்பூர் முருங்கப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது 15 .16 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில், கடந்த மாதம் 17ம் தேதி, முன்னாள் எம்.எல்.ஏ., மணி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில், மணி மீது மேலும் ஒரு ஒரு நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.