ராஜா மீது குற்றச்சாட்டு பதிவு எப்போது?செப்., 15ல் உத்தரவு
ராஜா மீது குற்றச்சாட்டு பதிவு எப்போது?செப்., 15ல் உத்தரவு
ராஜா மீது குற்றச்சாட்டு பதிவு எப்போது?செப்., 15ல் உத்தரவு
UPDATED : ஆக 30, 2011 12:49 AM
ADDED : ஆக 29, 2011 11:44 PM

புதுடில்லி:'2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்ட, 17 பேர் மீதும், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து, அடுத்த மாதம், 15ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, டில்லி சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, ராஜாவின் முன்னாள் செயலர் சந்தோலியா, பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, கலைஞர் 'டிவி' எம்.டி., சரத் குமார், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹரி நாயர் உள்ளிட்ட, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மீதான வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, வாதிட்டனர்.இதைத் தொடர்ந்து, நேற்று, சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர் லலித், தன் வாதத்தில், 'கைது செய்யப்பட்ட அனைவரும், தங்களுக்கும், தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, கூறியுள்ளதை ஏற்க முடியாது. ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஆகிய நிறுவனங்கள், உரிமம் பெறுவதற்கான தகுதியை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும், இந்நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன' என்றார்.இதைத் தொடர்ந்து, நீதிபதி ஓ.பி.சைனி, தன் உத்தரவில், 'கைது செய்யப்பட்டுள்ள, 17 பேர் மீதும், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து, அடுத்த மாதம் 15ம் தேதி, உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்றார்.