ADDED : ஆக 23, 2011 11:22 PM
திருப்பூர் : ஏழை மக்களின் நலனுக்காக, ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு
மாதந்தோறும் 20 முதல் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்குகிறது.
சிலர், இந்த
அரிசியை வாங்கி, ஆடு, மாடுகளுக்கு கொடுக்கின்றனர். சிலர், மாவு ஆட்டும்
மில், ஓட்டல்களுக்கு விற்கின்றனர். இதன் காரணமாக, இலவச அரிசி பயன் பாட்டை
கண்காணிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில்
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதலில்
மக்களிடம் வரவேற்பு பெற்ற இத்திட்டம், நாளடைவில் தரமில்லாத அரிசி
வழங்கப்பட்டதால் பலரும் வாங்க முன்வரவில்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள்
சிலரின் உதவியுடன் வெளிமாநிலங் களுக்கு லாரிகள் மூலம் ரேஷன் அரிசியை
கடத்தினர்.ஆட்சிப்பொறுப்புக்கு அ.தி.மு.க., வந்ததும் அனைத்து ரேஷன்
கார்டுதாரர்களுக்கும் 20 கிலோ அரிசியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி
இனத்தவர்களுக்கு 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. கருப்பு அரிசி
என்ற பேச்சுக்கு இடமில்லா மல் தூய வெள்ளை அரிசி மட்டுமே போடப்படுகிறது.
அரிசி கடத்தலை தடுக்க தனி தடுப்புப்பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அரிசிக்கென
மாதந்தோறும் பணம் ஒதுக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த அரிசியை
பலரும் வாங்கி பயன்பெறுகின்றனர். சிலர், வீட்டில் உள்ள ஆடு, மாடு,
கோழிகளுக்கு போடுகின்றனர். சிலர், கிலோவுக்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் என
மாவு ஆட்டும் மில்கள், ஓட்டல் களுக்கு விற்கின்றனர். ரேஷன் அரிசியை பெறும்
உணவகங்கள், நல்ல அரிசியுடன் ரேஷன் அரிசியை சேர்த்து உணவு பதார்த்தங்களை
தயாரிக்கின்றன. இந்நிலையில், ரேஷன் அரிசி வாங்குவோர் அனைவரும் குடும்ப
பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனரா; ஓட்டல் அல்லது
வெளியிடங்களுக்கு விற்பனை செய்கின்றனரா; எவ்வளவு ரூபாய்க்கு விற்கின்றனர்;
கால்நடைகளுக்கு வழங்குகின்றனரா; ஏதேனும் புகார்கள் வருகிறதா என,
கண்காணிக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குடிமை பொருள்
அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் துவங்க உள்ளது.இலவச
அரிசியை தவறாக பயன்படுத்துவோர் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட
கார்டு ரத்து செய்யப்படும். மேலும், உண்மையில் வறுமை கோட்டுக்கு கீழ்
உள்ளவர்கள் தானா என்ற விவரத்தை கேட்டு பெறும் நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படும் என ரேஷன் கடை பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.