ஜான்டேவிட் விடுதலை கோரிய மனு தள்ளுபடி
ஜான்டேவிட் விடுதலை கோரிய மனு தள்ளுபடி
ஜான்டேவிட் விடுதலை கோரிய மனு தள்ளுபடி
ADDED : செப் 14, 2011 01:20 AM
சென்னை : மாணவன் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான்டேவிட்டை விடுதலை செய்யக் கோரி, அவரது தாயார் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, ஐகோர்ட் உத்தரவிட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் நாவரசு, கொலை செய்யப்பட்டார். இவரது தந்தை, பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர். இந்தக் கொலை சம்பவம், 1996 ம் ஆண்டு நடந்தது. இவ்வழக்கில் அதே பல்கலைக்கழக மாணவன் ஜான்டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார்.வழக்கை விசாரித்த கடலூர் முதன்மை செஷன்ஸ் கோர்ட், ஜான்டேவிட்டுக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஜான்டேவிட்டை விடுதலை செய்தது. ஆனால், செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. தற்போது, கடலூர் மத்திய சிறையில் ஜான்டேவிட் உள்ளார்.
இவரது தாயார் எஸ்தர் தாக்கல் செய்த மனு:சம்பவம் நடந்த 1996 ம் ஆண்டு, ஜான்டேவிட்டுக்கு 19 வயது. அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, வயது 20. தமிழ்நாடு சீர்திருத்தப் பள்ளிகள் சட்டத்தின்படி, ஜான்டேவிட்டை சிறைக்கு அனுப்பியிருக்கக் கூடாது. சீர்திருத்தப் பள்ளிக்கு தான் அனுப்பியிருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது நடத்தை நன்றாக உள்ளது.வாலிப வயதில் செய்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டவர், சீர்திருத்தப் பள்ளிக்கு முதலில் அனுப்பப்பட வேண்டும் என்றும் 23 வயதை அடைந்த பின் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது முன்பு இருந்த சட்டம்.தற்போதைய சட்டத்தின்படி, சீர்திருத்தப் பள்ளியில் தண்டனையை அனுபவிக்கும் வாலிப பருவத்தினரை, 23 வயதை எட்டிய பின் சிறைக்கு அனுப்ப வேண்டியதில்லை. தமிழ்நாடு சீர்திருத்தப் பள்ளி சட்டம், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, வாலிப வயதில் குற்றம் புரிந்தவரை 23 வயது வரை சீர்திருத்தப் பள்ளியில் வைத்திருக்கலாம். அதன்பின், மீதி தண்டனை காலத்தை அனுபவிக்க அவரை சிறைக்கு அனுப்ப வேண்டியதில்லை.எனவே, தண்டனை விதிக்கும் போது ஜான்டேவிட்டுக்கு வயது 20 என்பதால், அவர் வாலிப வயதில் குற்றவாளி. தற்போது அவர் 23 வயதை கடந்து விட்டார். அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது சட்டவிரோதம். அவரை விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாகவும், தகுந்த கோர்ட்டில் முறையிட தங்களுக்கு உரிமை உள்ளது என, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரரின் வழக்கறிஞர் கூறியதை பதிவு செய்த 'டிவிஷன் பெஞ்ச்', மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


