
சினிமா நடிகை வனிதா விஜயகுமார்: என் மகன் ஸ்ரீஹரி எனக்கு புத்தி புகட்டிவிட்டான்.
டவுட் தனபாலு: அதனால, திரும்பவும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்ந்து வாழப்போறதா சொல்றீங்க... உங்க மகன் திரும்பவும், 'ஏம்மா இரண்டாவது கணவரை விட்டுட்டு வந்துட்டே'ன்னு கேட்டா, என்ன சொல்வீங்க...?
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்: அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினரை மத்திய அரசு ஊக்கப்படுத்துகிறது. அவர்கள், அரசியல் கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு முந்திச் செல்ல முயற்சிக்கின்றனர்.
டவுட் தனபாலு: அதான் எனக்கும் வருத்தம்... அரசியல் கட்சிகளையும், உங்களை மாதிரி அரசியல்வாதிகளையும் ஒரேயடியா ஒழித்துக் கட்டுறதை விட்டுட்டு இந்த அன்னா ஹசாரே, வெறுமனே ஓரங்கட்டிட்டு இருக்காரேன்னு...!
ராஜிவ் கொலையாளிகளின் வழக்கறிஞர் புகழேந்தி: ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு கூட, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு, அரசியல் சட்டத்தின், 161வது பிரிவு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
டவுட் தனபாலு: இப்படி ஆளாளுக்கு போர்க்கொடி தூக்கி போராடறதைப் பார்த்தா, 'மாநில அரசுகளுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்யற அதிகாரம் இருக்கு; அதை நிறைவேற்றுற அதிகாரம் தான் இல்லை போலவே'ன்னு, 'டவுட்' வருதே!