/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாணவ, மாணவியர் பெற்றோருக்கு பாத பூஜைமாணவ, மாணவியர் பெற்றோருக்கு பாத பூஜை
மாணவ, மாணவியர் பெற்றோருக்கு பாத பூஜை
மாணவ, மாணவியர் பெற்றோருக்கு பாத பூஜை
மாணவ, மாணவியர் பெற்றோருக்கு பாத பூஜை
ADDED : ஜூலை 19, 2011 12:30 AM
துறையூர்: துறையூர் அருகே கிராமப்புற பள்ளியில் மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருக்கு நடத்திய பாத பூஜையால் பெற்றோர் நெகிழ்ச்சியடைந்தனர். நகரங்களில் செயல்படும் ஆங்கில பள்ளிகளில் குரு பூர்ணிமா நாளில் பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை நிகழ்ச்சி நடத்த பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்வது வழக்கம். அந்நாளில், பிள்ளைகள் தங்கள் முதல் குருவான பெற்றோருக்கு பாத பூஜை செய்து வணங்குவதால் சிறந்த கல்வி பெறுவதோடு, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பாசம் அதிகரிக்கும். இதனால் பிள்ளைகள் பிற்காலத்தில் நற்பண்பு கொண்டவர்களாக விளங்குவார்கள் என்பதால் இதுபோன்ற விழாக்கள் இந்து மதத்தில் நடத்தப்படுகிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்திலுள்ள மான்ய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து நடத்திய குரு பூர்ணிமா நிகழ்ச்சி, கிராமப்புற பள்ளிகளில் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுவதில்லை என்ற குறையை போக்கியுள்ளது.நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோர்களின் பாதங்களை பால், பூ, மங்கலப் பொருட்களால் பூஜித்து, காலில் விழுந்து வணங்கினர். தங்கள் குழந்தைகளை பெற்றோர் மனமார ஆசீர்வதித்தனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு பூஜை செய்த கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார் கூறுகையில், ''இதுபோன்ற விழா நான் பள்ளியில் படித்த காலத்தில் இப்பகுதி கிராமங்களில் நடந்தது. என் காலத்தில் மீண்டும் கிராமத்தில் இவ்விழாவை நடத்தியது சந்தோசமாக உள்ளது,'' என்றார்.
பெற்றோர் கூறுகையில், ''கூட்டுக்குடும்ப முறை வழக்கொழிந்து தனி குடும்பங்களிலும் உறவுகள் கசந்து வரும் சூழலில் இதுபோன்ற விழா நெகிழ்ச்சி ஏற்படுத்துகிறது,'' என்றனர். விழாவில், பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள், சமையலர், உதவியாளர், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.