மொழிப்போர் தியாகி பென்ஷன் : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
மொழிப்போர் தியாகி பென்ஷன் : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
மொழிப்போர் தியாகி பென்ஷன் : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 16, 2011 11:12 PM
மதுரை: கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க போராடியவருக்கு மொழிப்போர் தியாகி பென்ஷன் வழங்குவது குறித்து எட்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கிளாவிளையை சேர்ந்த முத்தையன் தாக்கல் செய்த ரிட் மனு:
திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றேன். மாவட்ட அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கவும் போராடி சிறை சென்றேன். குஞ்சன்நாடான், மார்சல் நேசமணி, பொன்னப்பநாடார், மணி ஆகிய தியாகிகளுடன் சிறையில் இருந்தேன். தொடர் போராட்டங்களால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்தது. தமிழை அலுவல் மொழியாக்க போராட்டத்தில் ஈடுபட்டேன். மொழிப்போர் தியாகி பென்ஷன் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தேன். கலெக்டர் இதுகுறித்து விசாரிக்க விளவங்கோடு தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அவர் விசாரிக்கவில்லை. தாசில்தார் விசாரித்து கலெக்டரிடம் அறிக்கை அளிக்கவும், அதை அவர் அரசுக்கு அனுப்பி, தியாகி பென்ஷன் வழங்கவும் உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பாலமீனாட்சி, பாலகிருஷ்ணனும், அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் கோவிந்தனும் ஆஜராயினர். நீதிபதி, ''மனுதாரர் மனுவை தகுதி அடிப்படையில் எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என கலெக்டர், தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.