PUBLISHED ON : ஆக 04, 2011 12:00 AM

'படிப்பு ஒன்று தான் வழி!'
இந்திய அளவில் சிறந்த சட்டக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும்,'கிளாட்' தேர்வில், 55வது இடம் பிடித்துள்ள கார்த்திகா: சொந்த ஊர், தர்மபுரி அருகில் உள்ள ஈச்சம்பட்டி. எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா உள்ளனர். எனக்கு மூன்று வயது இருக்கும்போது, என் அப்பா இறந்து விட்டார். என் அம்மா, பிழைப்பிற்காக, பெங்களூரில் செட்டிலாகி விட்டார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக அங்கு தான் பாறை உடைத்துக் கொண்டிருக்கிறார்; இப்போது வரை. தினமும் குவாரியில் கல் உடைக்கப் போகும்போது, மூன்று வயதான என்னை சர்ச்சில் விட்டுச் செல்வார். சாந்தி பவன் என்ற உறைவிடப் பள்ளியில் இருந்து வந்த ஒருவர், என் குடும்பத்தின் வறுமையை அறிந்து, அவருடன் அழைத்துச் செல்ல, அம்மாவிடம் சம்மதம் கேட்டு, என்னை அழைத்துச் சென்றார்.
எனக்கு சாந்தி பவன் ஒரு பிடிமானமாக கிடைத்தாலும், படிக்க வேண்டிய வயதில், கல் உடைக்கப் போகும் அண்ணாவையும், அக்காவையும் நினைத்து மன வேதனையுடன் உள்ளார் அம்மா. நம்மள மாதிரி குடும்பங்களின் அவல நிலையை மாற்ற, படிப்பு ஒன்று தான் வழி என்று உணர்ந்து, படிக்க ஆரம்பித்தேன். நான் பார்த்து,கேட்ட விஷயங்கள் மூலம், சட்டம் படிக்க ஆர்வம் வந்தது. பிளஸ் 2 முடித்தவுடன், 'கிளாட்' தேர்வு எழுதினேன். இந்திய அளவில், 55வது இடம் கிடைத்தது. கடைசி வரை என் சம்பளத்தில் இருந்து 30 சதவீத பணத்தை சாந்தி பவனுக்கு கொடுப்பேன். சமூகத்தில், மாற்றத்தை கொண்டு வர வேண்டுமானால், நம் அதிகாரம் கையில் வேண்டும்.
அதனால், பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்; அதற்காக என்னை தயார் செய்யும் வேலையை நான் ஏற்கனவே தொடங்கி விட்டேன்!