ADDED : செப் 15, 2011 11:31 PM
கோவை:அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் 'மகாகவி பாரதியார் விழா'
கொண்டாடப்பட்டது.தமிழ்துறை மாணவி ஜெயலட்சுமி வரவேற்றார். பல்கலை
துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.அவினாசிலிங்கம் மகளிர்
பல்கலை முன்னாள் துணை வேந்தர் சரோஜா 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' எனும்
தலைப்பில் பேசியதாவது: பாட்டுக்கொரு புலவன் பாரதியடா எனும் கவிமணியின்
புகழ் வரிகள் பாரதியின் பெருமையை தேசத்துக்கு எடுத்துக் கூறுகிறது.
இறைவனிடம் 100 ஆண்டுகள் வாழவேண்டுமென பாரதி வேண்டியது அவரின்
சுயநலத்துக்காக அல்ல; தேசத்துக்காக சேவைபுரிய வேண்டும் என்ற உயர்
எண்ணத்தில் தான். அவ்வாறு வாழ்ந்த பாரதியின் அற்பணிப்புகள்
எண்ணிலடங்காதது.இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும், பிறந்தோம்,
வளர்ந்தோம் என்றில்லாமல் தேசத்துக்காக நாம் என்ன செய்தோம் என்று எண்ணி
பெருமை சேர்க்க வேண்டும்.
மாணவர்கள் தேசத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள்.
பாரதியின் கனவு நனவாக தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு தேசம் தலைத்தோங்க அயராது பாடுபட
வேண்டும்.தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றுகூடி போராட வேண்டும். அடுப்பூதும்
பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் மாறி, தற்போது அனைத்து துறைகளிலும்
பெண்களின் பங்களிப்பு உள்ளன. இந்த நிலைக்கு காரணம் பாரதியின் தீரா
முயற்சியே. பாரதியின் கனவை நனைவாக்கி இந்தியா வல்லரசாக உருவாக பாடுபட
வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தமிழ்துறை மாணவி மகாலட்சுமி நன்றி
கூறினார்.


