Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கண்காணிப்பாளருக்கு "டோஸ்': எகிறியது டாக்டர்களின் "பல்ஸ்' :அரசு மருத்துவமனையில் அமைச்சர் அதிரடி ஆய்வு

கண்காணிப்பாளருக்கு "டோஸ்': எகிறியது டாக்டர்களின் "பல்ஸ்' :அரசு மருத்துவமனையில் அமைச்சர் அதிரடி ஆய்வு

கண்காணிப்பாளருக்கு "டோஸ்': எகிறியது டாக்டர்களின் "பல்ஸ்' :அரசு மருத்துவமனையில் அமைச்சர் அதிரடி ஆய்வு

கண்காணிப்பாளருக்கு "டோஸ்': எகிறியது டாக்டர்களின் "பல்ஸ்' :அரசு மருத்துவமனையில் அமைச்சர் அதிரடி ஆய்வு

ADDED : செப் 18, 2011 09:45 PM


Google News
கோவை : 'சுத்தம் செய்யப்படாத வெற்றிலைக் கறை சுவர்கள்...

அள்ளப்படாமல் நிறைந்து வழியும் குப்பைத் தொட்டிகள்... உடைந்து போன வீல் சேர்கள், ஸ்ட்ரெச்சர்கள்...மாற்றப்படாத படுக்கை விரிப்புகள்...நோயாளியின் படுக்கை அருகே தேங்கி நிற்கும் கழிவு நீர்... துர்நாற்றமெடுக்கும் கழிப்பறைகள்...எரிந்து விழும் ஊழியர்கள்...', இப்படி கோவை அரசு மருத்துவமனையின் தனித்துவ அடையாளங்கள் எதையும் நேற்று காலை காண முடியவில்லை. ஆங்காங்கே பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, குப்பைகள் அவசரம் அவசரமாக அகற்றப்பட்டிருந்தன. டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டையும், 'ஸ்டெத்'தும் தொங்க வலம் வந்தனர். 'ஆட்சி மாறியதும் ஏதாவது அற்புதம் நிகழ்ந்து விட்டதோ' என அதிசயித்து முடிப்பதற்குள் போலீஸ் சைரன் வேன் சகிதம் வளாகத்தினுள்ளே வந்திறங்கினார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய். திடீர் சுகாதாரத்துக்கு மருத்துவமனை மாறியதின் பின்னணி அப்போதுதான் புரிந்தது. அமைச்சர் வந்திறங்கியதும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அமைச்சரின் வருகைக்காக ஸ்பெஷலாக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு சில வார்டுகள் பக்கம் அழைத்துச் செல்ல தயாரானார் மருத்துவமனை கண்காணிப்பாளர் மதிவாணன். ஆனால் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாமல் செல்லாமல், திடீர் திடீரென சில வார்டுகள், அறைகளுக்குள் நுழைந்து டாக்டர்களின் 'பல்சை' எகிற வைத்தார் அமைச்சர். தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைந்த அமைச்சர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கர் என்பவரின் மருத்துவ ஆவணங்களை சரி பார்த்தார். அங்கு ஒரு 'வெண்டிலேட்டர்' பழுதடைந்த நிலையில் அரைகுறையாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அமைச்சர், 'வேற வெண்டிலேட்டர் இல்லையா?' என்றார். மொத்தம் 8 வெண்டிலேட்டரில் ஒன்று மட்டுமே செயல்படுவதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே டென்ஷன் ஆன அமைச்சர், கண்காணிப்பாளரைப் பார்த்து, ''நோயாளியின் உயிரைக் காப்பாத்த உதவுறதே வெண்டிலேட்டர்தான். இதுவே இந்த லட்சணத்துல இருந்தா எப்படிங்க? நானும் ஒரு டாக்டர்தாங்க. கடவுளுக்கு அடுத்தபடியா நம்மளைதான் பேஷன்ட்ஸ் நம்பி வர்றாங்க. நீங்களே இப்படி கண்டுக்காம இருந்தா என்னாகுறது?,'' என எகிறினார். உடனடியாக கண்காணிப்பாளருக்கு 'மெமோ' கொடுக்க உத்தரவிட்டார். அதன் பின் வெறிநாய்க்கடி சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்த அவர், அங்கு வெறி நாய்க்கடி மருந்து இருப்பு பதிவேட்டை ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து 'டோஸ்' குறித்து கேட்டறிந்தார். இறுதியில் டாக்டர்களுடன் ஒரு மணி நேரம் கலந்தாலோசனை நடத்தினார் அமைச்சர். நிருபர்களிடம் அமைச்சர் விஜய் கூறுகையில், ''கடந்த தி.மு.க., ஆட்சியில் 'டாப்ளர்', வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் எதுவும் பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. அனைத்து உபகரணங்களையும் விரைவில் பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை வளாகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் 968 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டடம், மூன்று லட்சத்து 23 ஆயிரம் சதுரடி பரப்பில் கட்டப்படவுள்ளது. இப்பணிக்கான டெண்டர் அக்.12ல் திறக்கப்படவுள்ளது,'' என்றார். தொழில் துறை அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் மலரவன், சேலஞ்சர் துரை, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா, கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் விமலா, இருப்பிட கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர். ஓய்வு நாளில் மட்டுமே ஆய்வு: ஓர் அரசு மருத்துவமனை எப்படி இருக்கக் கூடாதோ அப்படி இருக்கிறது கோவை அரசு மருத்துவமனை. சுத்தம், சுகாதாரம் 'சுத்தமாக' இல்லை. நேற்றிரவு பிரசவித்த தாய்மார்கள் கூட தங்கள் சிசுவுடன் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரின் அருகில், கட்டாந்தரையில் துணி விரித்து படுத்துறங்கும் அவலத்தை இங்கு மட்டுமே காண முடியும். ஏழை நோயாளிகள் படும் இது போன்ற அவஸ்தைகள் ஆய்வுக்கு வரும் அமைச்சருக்கு எட்டுவதே இல்லை. சிகிச்சை கேட்டு வலியுடன் உயிரை கையில் பிடித்தபடி காத்திருக்கும் பரிதாப நோயாளிகளின் கூட்டத்தை அமைச்சர் ஆய்வின்போது பார்க்க முடிவதில்லை. அமைச்சர் வந்தால் இது குறித்தெல்லாம் புகார் செய்ய காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்களை பார்க்க முடிவதில்லை. காரணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாளில் மட்டுமே ஆய்வு நடப்பதால், பல விஷயங்கள் அமைச்சருக்குத் தெரியவருவதே இல்லை. அடுத்தமுறை அமைச்சர் தனது ஆய்வை முன்னறிவிப்பில்லாமல் ஒரு திங்கள் கிழமை நடத்தினால் நல்லது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us