Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாற்றுத் திறனாளிகள் உரிய வேலையின்றி தவிப்பு:மறுவாழ்வு நிலையம் மெத்தனம்

மாற்றுத் திறனாளிகள் உரிய வேலையின்றி தவிப்பு:மறுவாழ்வு நிலையம் மெத்தனம்

மாற்றுத் திறனாளிகள் உரிய வேலையின்றி தவிப்பு:மறுவாழ்வு நிலையம் மெத்தனம்

மாற்றுத் திறனாளிகள் உரிய வேலையின்றி தவிப்பு:மறுவாழ்வு நிலையம் மெத்தனம்

ADDED : ஆக 03, 2011 01:18 AM


Google News

சென்னை : ''அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், உதவித் தொகையும்,வேலை வாய்ப்பும், உரிய நேரத்தில் கிடைக்கவில்லை'' என்று மாற்றுத் திறனாளிகள் குமுறுகின்றனர்.

மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில்,கிண்டி சி.டி.ஐ., வளாகத்தில், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையம் இயங்கி வருகிறது.

கண் பார்வையற்றோர், காது கேளாதோர், கை கால் ஊனமுற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு, தொழில் கல்வி மற்றும் வழிகாட்டுதல் மூலம், வாழ்க்கைக்கு உதவும் நோக்கில், இந்நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக தட்டெழுத்து, கணினி, வீட்டு சாதனங்கள் பழுது பார்த்தல், டர்னர், பிட்டர், வெல்டர், ஸ்கிரின் பிரின்டிங்,போட்டோகிராபி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.



ஓராண்டு காலம் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் திறன் கணிப்பு, கல்வித் தகுதிகளின் அடிப்படையில், மத்திய அரசு அலுவலகங்களில், மூன்று சதவீத வேலை வாய்ப்பும் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும். மிகவும் தொலை தூரத்தில் உள்ள ஊனமுற்றோரின் நலன் கருதி, மாநில அரசுத் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்புடன், ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும், கிராமப் புறங்களிலும் மற்றும் பஞ்சாயத்து யூனியன் அளவிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு முகாம் நடத்தி, சுயவேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வங்கி கடன் பெற்று தொழில் துவங்க ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.



இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் மூலம், மாதம் 100 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்பட வேண்டும். ஆனால்,''இப்பணிகள் அனைத்திலுமே அதிகாரிகள் துரிதமாக செயல்படவில்லை. பெயரளவிற்கே செயல்படுகின்றனர்'' என்று மறுவாழ்வு நிலை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து, இந்நிலையத்தில் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கூறியதாவது: அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் எந்த உதவியும் உரிய காலத்தில் கிடைக்கவில்லை. இதனால், மிக குறைந்த சம்பளத்திற்கே தனியார் கம்பெனிகளின் பணிபுரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள் ளது. கிண்டி சி.டி.ஐ., வளாகத்தில் உள்ள விடுதியில், குறைந்த எண்ணிக்கையில் ஆண்களுக்கு மட்டுமே வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு விடுதி வசதி கிடையாது. ஆண், பெண் இருபாலருக்கும் தனியாக விடுதி வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.



இந்நிலையத்தில் பயிற்சி முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, மாதம் 100 ரூபாய் உதவித் தொகை வழங்குவது, 1976ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இந்த உதவித் தொகை கூட ஆறு மாதங்கள், ஒரு வருடம் என இழுத்தடித்து, அனுப்பி வைக்கின்றனர்.இப்போது உள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மாற்றுத் திறனாளிகளும்,பெற்றோரும் வேதனையுடன் கூறினர். இது குறித்து மையத்தின் அதிகாரிகள் சிலரிடம் கேட்ட போது,''மாற்றுத் திறனாளிகளுக்கு விடுதி வசதி மிகவும் அவசியம். உதவித் தொகை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். பயிற்சி மையம் மிகக் குறைந்த இடத்தில், இயங்கி வருகின்றது.இம்மையத்திற்கு போதுமான இடவசதி செய்யப்பட, உட்கட்டமைப்புகள் விரைவாக மேம்படுத்தப்பட வேண்டும். பயிற்சிக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. ஆண்டிற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். சிறப்பான பயிற்சி அளிக்க ஏதுவாக இருக்கும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை நிலை கருதி, இந்நிலையத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட அரசு ஆவன செய்ய வேண்டும்,'' என்றும் கூறினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us