கருப்பசாமி பாண்டியனை செப்., 25 வரை பாளை., சிறையில் வைக்க உத்தரவு
கருப்பசாமி பாண்டியனை செப்., 25 வரை பாளை., சிறையில் வைக்க உத்தரவு
கருப்பசாமி பாண்டியனை செப்., 25 வரை பாளை., சிறையில் வைக்க உத்தரவு
ADDED : செப் 17, 2011 12:57 AM
மதுரை: நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சியில், நில அபகரிப்பு வழக்கில் கைதான தி.மு.க., மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியனை, செப்., 25 வரை பாளையங்கோட்டை சிறையில் வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நடுவக்குறிச்சியில், கொம்பையாவுக்குச் சொந்தமான நிலத்தை கருப்பசாமி பாண்டியனின், சகோதரர் சங்கரசுப்பு மகள் சங்கரி அபகரித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, கருப்பசாமி பாண்டியன், சங்கரசுப்பு உட்பட சிலர் மீது வழக்கு பதிவானது. இதில், கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவர், நெல்லை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை சிறையில் இருந்து நெல்லை கோர்ட்டிற்கு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறேன். ஏற்கனவே, முதுகுத் தண்டுவட பாதிப்பால் அவதியுறுகிறேன்.
விசாரணைக்காக, 300 கி.மீ., பயணம் செய்ய முடியாது. எனவே, பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்'' என்றார். அவரை ஒரு நாள் மட்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதை எதிர்த்து, கருப்பசாமி பாண்டியன், ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.
மனு, நீதிபதி எஸ்.பழனிவேலு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆனந்த் ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அதை ஏற்று, விசாரணையை செப்., 25க்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை கருப்பசாமி பாண்டியனை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.