Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/திருவனந்தபுரம் கோயில் பொக்கிஷங்கள் திருவட்டாரில் ஒரு லட்சம் கையெழுத்து வேட்டை

திருவனந்தபுரம் கோயில் பொக்கிஷங்கள் திருவட்டாரில் ஒரு லட்சம் கையெழுத்து வேட்டை

திருவனந்தபுரம் கோயில் பொக்கிஷங்கள் திருவட்டாரில் ஒரு லட்சம் கையெழுத்து வேட்டை

திருவனந்தபுரம் கோயில் பொக்கிஷங்கள் திருவட்டாரில் ஒரு லட்சம் கையெழுத்து வேட்டை

ADDED : ஜூலை 12, 2011 12:30 AM


Google News

திருவட்டார் : திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் கிடைத்த பொக்கிஷத்தில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கும் சொந்தமான பொக்கிஷங்கள் உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வலியுறுத்தி பக்தர்கள் சங்கம் சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து சேகரிப்பு நடந்தது.

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் கிடைத்த பொக்கிஷத்தில் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கும் தொடர்பு உள்ளது.

இதனால் ஆதிகேசவ பெருமாள் கோயிலின் பொக்கிஷங்களை மீட்க வேண்டுமென கேட்டு திருவட்டார் பெருமாள் கோயில் முன் கையெழுத்து சேகரிப்பு நடந்தது.

பக்தர்கள் சங்க தலைவர் பகவதி தலைமை வகித்தார். குமரி மாவட்ட தியாகிகள் சங்க செயலாளர் சுந்தரராஜ், தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் சுவாமிதாஸ், சதீஷ், கனகராஜ், அகஸ்டீன், சுப்ரமணியன், கங்காதரன், பா.ஜ., பஞ்., பொதுச்செயலாளர் பாகுலேயன் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ் முதல் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். இதுகுறித்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் பக்தர்கள் சங்க தலைவர் பகவதி கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில் அமைந்துள்ளது ஆதிகேசவ பெருமாள் கோயில். இது 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமையானது. இக்கோயிலில் கடுகு, சர்க்கரை, சாலிகிராமத்திலான சிலையை பரசுராமன் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு.

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலை பிரதிஷ்டை செய்தது வில்வமங்கல சுவாமிகள். பரசுராமனும், வில்வமங்கல சுவாமிகளும் வாழ்ந்த காலத்தின் இடைவெளி சில நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கும். இதில் இருந்தே திருவட்டார் கோயில் மிக பழமை வாய்ந்தது என தெரிய வருகிறது.

இரு கோயில்களின் பூஜைகள், விழாக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை. மன்னர் ஆட்சி முடிந்த பின்பும் பத்மனாபசுவாமி கோயிலை போன்று மன்னரின் அனுமதி பெற்றே திருவிழா உட்பட அனைத்து சடங்குகளும் இங்கு நடக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர்களின் முதல் குலதெய்வம் ஆதிகேசவ பெருமாள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மனாபபுரம் இருந்தது. பத்மனாபபுரத்தில் இருந்து தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றிய போது மன்னர் குடும்பத்தின் முதல் குலதெய்வமான ஆதிகேசவ பெருமாளுக்கு சொந்தமான விலை உயர்ந்த பொக்கிஷங்களை பாதுகாப்பிற்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

மன்னர் குடும்பத்தின் கட்டுபாட்டில் இரண்டு கோயில்களும் இருந்ததால் இரண்டு கோயில்களின் பொக்கிஷங்களை சேர்த்தே ரகசிய அறையில் பாதுகாக்கப்பட்டிருக்கும். தற்போது கிடைத்துள்ள பொக்கிஷங்கள் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கும் சொந்தமானதாக இருக்கலாம்.

எனவே தமிழக அரசும், கேரள அரசும், திருவிதாங்கூர் மன்னரும் இந்த பொக்கிஷத்தில் ஆதிகேசவ பெருமாள் கோயில் ஆபரணங்கள் உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு லட்சம் கையெழுத்து அடங்கிய மனு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பகவதி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us