Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தி.மு.க., கட்சி அமைப்பில் மாற்றம் வருமா?

தி.மு.க., கட்சி அமைப்பில் மாற்றம் வருமா?

தி.மு.க., கட்சி அமைப்பில் மாற்றம் வருமா?

தி.மு.க., கட்சி அமைப்பில் மாற்றம் வருமா?

ADDED : ஜூலை 24, 2011 02:06 AM


Google News

கோவை : தி.மு.க., தலைமை பொறுப்பு மற்றும் தற்போதுள்ள கட்சி அமைப்பு முறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து நேற்றைய செயற்குழுவில் உறுதியான முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் இன்றைய பொதுக்குழுவில் அது தொடர்பாக விவாதிக்கப்படுமா என்ற பரபரப்பில் தொண்டர்கள் உள்ளனர்.தி.மு.க., செயற்குழு கூட்டம் கோவை, சிங்காநல்லூரிலுள்ள விஜயா கண்காட்சி மைதானத்தில் நேற்று நடந்தது. உளவுப்போலீசார், பத்திரிகையாளர்கள், தனியார் 'டிவி' கேமரா மேன்கள் அரங்கினுள் நுழைந்து தகவல் சேகரித்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில், நூற்றுக்கும் மேற்பட்ட சீருடைத் தொண்டர்கள், அரங்கை சுற்றி காவலிருந்து கண்காணித்தனர். கட்சி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தவிர யாரையும் உள்ளே நுழையாமல் தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.



கருணாநிதி, ஸ்டாலின், அழகிரியுடன் பாதுகாப்புக்குச் சென்றிருந்த போலீசாரைக்கூட (பர்சனல் செக்யூரிட்டி ஆபீசர்ஸ்) அரங்கிலிருந்து கட்சி நிர்வாகிகள் வெளியேற்றிவிட்டனர். கூட்ட அரங்கில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் இருந்தபோது, கூட்டத்தில் இருந்து திடீரென 'அழகிரி வாழ்க' 'அழகிரி வாழ்க' என்று திடீர் கோஷம் எழுந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிலர் 'ஸ்டாலின் வாழ்க' 'ஸ்டாலின் வாழ்க' என்று கோஷமிட்டனர். இதைக்கண்டு கடும் கோபமடைந்த கருணாநிதி, 'இப்படி கோஷமிட உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது' என, கடிந்து கொண்டார். அவரது கோபத்தை கண்ட கூட்டத்தினர், அடுத்த சில விநாடிகளில் அமைதி காத்தனர். அதன்பின், கட்சியின் முன்னணி தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை, ஆதங்கங்களை தெரிவித்து பேசினர்.



தூத்துக்குடி மாவட்டத்தில் கோஷ்டி பூசல் காரணமாக கட்சியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று எம்.பி., ஜெயதுரை பேச, அதற்கு அந்த மாவட்டச் செயலாளர் பெரியசாமி கடும் ஆட்சேபம் தெரிவித்து மறுத்து பேசினார்.

கட்சித் தலைமை பொறுப்பு மற்றும் கட்சி அமைப்பின் முறையை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அதுபோன்ற மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. லோக்சபா, சட்டசபை தொகுதிகள் வாரியாக கட்சி நிர்வாகிகளை நியமிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும். எனவே, தற்போதுள்ள மாவட்ட அளவிலான அமைப்பு முறையையே தொடரலாம் என்றனர். கொங்குநாடு முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி சேர்ந்ததன் மூலமாக கடந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு பெரிய அளவில் எவ்வித பயனும் ஏற்படவில்லை. தவறான கணிப்புகள் மூலம் கூட்டணி அமைத்து தேர்தலில் அநியாயமாக தோற்றுவிட்டோம் என்று ஆதங்கப்பட்டனர். இலவசத் திட்டங்களை மட்டுமே நம்பியதால், தேர்தலில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என சிலர் வேதனையை வெளிப்படுத்தினர். தி.மு.க.,வை அழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு கட்சியினர் மீது நில அபகரிப்பு வழக்குகளை போட்டுவரும் அ.தி.மு.க., அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று சிலர் ஆவேசமாக பேசினர்.



நிர்வாகிகளின் ஆதங்க, ஆவேச பேச்சுகளுக் கருணாநிதி பதிலளித்து பேசினார்.தி.மு.க.,வின் உள்கட்சித் தேர்தலை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் நடத்துவது; தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது; திருச்சி இடைத் தேர்தலில் போட்டியிட கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது; தி.மு.க.,வினர் மீதான நில அபகரிப்பு வழக்குகளை முறியடிக்க சட்ட ரீதியான, அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது; தற்போதுள்ள கட்சி அமைப்பு முறையில் மாற்றியமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. எனினும், ஸ்டாலினுக்கு கட்சியில் புதிய பொறுப்பு வழங்கி முன்னிலைப்படுத்துவது தொடர்பான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.



அதேபோன்று, அழகிரி வசமுள்ள கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர் பதவியை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான விமர்சனங்களும் எழவில்லை. இதனால்,செயற்குழு அமைதியாகவே முடிந்தது. மாலை 4.20 மணிக்கு துவங்கிய செயற்குழு கூட்டம் இரவு 8.10 மணிக்கு முடிந்தது. இன்று கட்சியின் பொதுக்குழு கூடுகிறது; பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர். நேற்று விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பாக பொதுக்குழு வில் இன்று விவாதிக்கப்படக்கூடும் என்பதால், கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us