சென்னை நகரில் விதிகளை மீறிய 64 வணிக வளாகங்களுக்கு விரைவில் "சீல்'
சென்னை நகரில் விதிகளை மீறிய 64 வணிக வளாகங்களுக்கு விரைவில் "சீல்'
சென்னை நகரில் விதிகளை மீறிய 64 வணிக வளாகங்களுக்கு விரைவில் "சீல்'
சென்னை : சென்னை தி.நகர் உள்ளிட்ட இடங்களில் விதிகளை மீறி கட்டப்பட்ட, 64 அடுக்குமாடி வணிக வளாகங்களை 'சீல்' வைப்பது அல்லது இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட, 33 ஆயிரம் கட்டடங்கள் மீது இடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க கண்காணிப்புக்குழு அமைத்து, சென்னை ஐகோர்ட், 2006ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த கட்டடங்களில் நடந்துள்ள விதிமீறல் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ., துணைத் தலைவர் தலைமையில், 12 உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, முதல்கட்டமாக 42 கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், தி. நகர் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட 64 அடுக்குமாடி வணிக வளாகங்கள் மீது இடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்திருந்தது.
இதன் நடவடிக்கைகளை முடக்கும் வகையில், நகர் ஊரமைப்பு சட்டத்தை திருத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, 2007 ஜூலை 27ம் தேதி ஒரு அவசர சட்டத்தை, தமிழக அரசு பிறப்பித்தது.
இதை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து, 2007ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதைஎதிர்த்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதில், 'இப்போதுள்ள நிலை அப்படியே தொடர வேண்டும்' என, 2007ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
நீதிபதி மோகன் குழு, தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துவிட்டதால், கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'இப்போதுள்ள நிலை அப்படியே தொடர வேண்டும்' என்ற உத்தரவை ரத்து செய்தது.
இதையடுத்து, விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்வதில் கண்காணிப்புக்குழுவுக்கு இருந்துவந்த தடை நீங்கியது. இந்த நிலையில் கண்காணிப்புக் குழுவின் கூட்டம், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
சிறப்பு அதிரடிப்படை: கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம்: கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 27ம் தேதிக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவுகளை முழுவீச்சில் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவது.
அப்போது, விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி வணிக வளாகங்கள் மீது இடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் சில மாற்றங்கள் செய்து, முதல்கட்டமாக இத்தகைய வளாகங்களை பூட்டி 'சீல்' வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2007ம் ஆண்டுக்கு பின்னர் கட்டப்பட்ட கட்டடங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 50 வளாகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கண்காணிப்புக்குழு உத்தரவுகளை விரைந்து நிறைவேற்றும் வகையில், சி.எம்.டி.ஏ.,வின் அமலாக்கப்பிரிவில் போதிய எண்ணிக்கையில் ஆள்பலம் இல்லை. இதனால் குழுவின் நடவடிக்கைகள் தாமதமாகும்.
இதற்கு தீர்வாக, விதி மீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மட்டுமல்லாது, மாநகராட்சி, பிற உள்ளாட்சிகள், தீயணைப்பு படை, மின்சார வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளை கொண்டதாக இது இருக்கும்.
இதை அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்களின் செயலாக்கம் குறித்து அடுத்த மாதம் நடைபெறும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என, குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.